ஊரக திறனாய்வு தேர்வு: வருமான உச்சவரம்பை உயர்த்த கோரிக்கை
ஊரக திறனாய்வு தேர்வு: வருமான உச்சவரம்பை உயர்த்த கோரிக்கை
UPDATED : ஆக 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உடுமலை: ஊரக திறனாய்வுத்தேர்வு எழுதுவதற்கான வருமான உச்சவரம்பு பல ஆண்டுகாலமாக உயர்த்தப்படாததால், கிராமப்புற மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல் நீடிக்கிறது.
கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக, தமிழக அரசால், ‘ஊரக திறனாய்வுத் தேர்வு’ அறிமுகப்படுத்தப்பட்டது. எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி, 50 சதவீதம் மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் மாணவர்கள், இத்தேர்வு எழுத தகுதி பெறுவர்.
தேர்வில் பங்கேற்க மாணவர்கள், வருமான மற்றும் ஜாதிச் சான்றிதழ்கள் அளிக்க வேண்டும்; குடும்ப வருமானம் 12 ஆயிரம் ரூபாய் என இருக்க வேண்டும். தேர்வில் வெற்றி பெற்றால், 12ம் வகுப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. இத்தேர்வு ஆண்டுதோறும், செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், காலத்துக்கு ஏற்றவாறு விதிமுறைகள் மாற்றப்படவில்லை. இதனால், தற்போது மாணவர்கள் பயன்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. குடும்ப வருமான உச்சவரம்பு உயர்த்தப்படாததால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
பெற்றோர் கூறுகையில்,‘ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஊரக திறனாய்வு தேர்வை அரசு நடத்தி வருகிறது. குடும்ப வருமானம் 12 ஆயிரம் ரூபாய் என வருமானச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும்.
ஆனால், ஒரு சாதாரண குடும்பத்தின் வருமானம் சராசரி 20 ஆயிரம் ரூபாய் தான் எனக்கூறி, சான்றிதழ் தர வருவாய் துறை அதிகாரிகள் மறுத்து விடுகின்றனர். இதனால், தேர்வு எழுத மாணவர்கள் இடையே ஆர்வம் குறைந்து வருகிறது. குடும்ப வருமான சான்றிதழ் வழங்கும் வகையில், உச்சவரம்பு அளவை உயர்த்த வேண்டும்’ என்றனர்.
தமிழக இடைநிலை ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் சிவக்குமார் கூறுகையில், “அறிவுத்திறனை வெளிப்படுத்தும் போட்டித் தேர்வுக்கு வருமானச்சான்றிதழ் கேட்பதால், மாணவர்கள் மன உளைச்சல் அடைகின்றனர்.
பெற்றோரும் சான்றிதழ் வாங்குவதற்காக அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலையும், தேர்வு எழுதிய மாணவர்கள் ஊக்கத்தொகை பெற முடியாத நிலையும் உள்ளது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு விண்ணப்ப படிவங்கள் வந்துள்ளன. ஆனால், விதிமுறைகளில் மாற்றமில்லாததால், மாணவர்களிடம் தேர்வு எழுத ஆர்வம் குறைந்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

