முதல்வர் மற்றும் போதுமான ஆசிரியர்கள் இல்லாத சட்டக் கல்லூரிகள்
முதல்வர் மற்றும் போதுமான ஆசிரியர்கள் இல்லாத சட்டக் கல்லூரிகள்
UPDATED : மே 09, 2011 12:00 AM
ADDED : மே 09, 2011 11:12 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளில், ஐந்து சட்டக் கல்லூரிகளில், முதல்வர் பதவி காலியாக உள்ளது.
சென்னை சட்டக் கல்லூரியில் மட்டும் 31 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், கெஸ்ட் லெக்சரர்களை வைத்து, கல்லூரி நிர்வாகம் சமாளித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், திருநெல்வேலி, கோவை, மதுரை, திருச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 7,000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
வேலூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 3 சட்டக் கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே முதல்வர் பதவி காலியாக உள்ளது. கோவை, மதுரை ஆகிய இடங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளில் முதல்வராக பணிபுரிந்த இருவரும், இந்த ஆண்டு ஓய்வுபெற்று விட்டனர். இந்த வகையில், மொத்தம் உள்ள 7 சட்டக் கல்லூரிகளில், ஐந்தில் முதல்வர் பதவி காலியாகவே உள்ளது.
கல்லூரியின் வளர்ச்சிக்கும், மாணவர்கள் நலனுக்கும் பணிபுரிய வேண்டிய முக்கிய பதவியான முதல்வர் பதவி காலியாக இருப்பதால், இக்கல்லூரிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காலியாக உள்ள முதல்வர் பதவியை நிரப்ப வேண்டும் என பலமுறை கோரியும், அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. இதுகுறித்த கோப்புகள், அரசுக்கும், கல்லூரிகளுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக இழுபறியில் உள்ளன.
சென்னை சட்டக் கல்லூரியை பொறுத்தவரையில், மொத்தம் 39 பேராசிரியர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது 8 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஓய்வுபெற்ற பேராசிரியர்களின் பதவிகளை உடனடியாக நிரப்பாததே இதற்குக் காரணம். சென்னை சட்டக் கல்லூரியை மேம்படுத்த, சண்முகம் கமிஷன் கொடுத்த அறிக்கைகள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
சென்னை சட்டக் கல்லூரியில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப வேண்டும். புத்தக சாலை மற்றும் உடற்பயிற்சி துறையை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல சிபாரிசுகளை சண்முகம் கமிஷன் கூறியுள்ளது. ஆனால், இன்றுவரை பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. நிலைமையை சமாளிக்க, கெஸ்ட் லெக்சரர்களை, கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இந்த வகையில், 500க்கும் மேற்பட்ட கெஸ்ட் லெக்சரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து, சென்னை சட்டக் கல்லூரி ஊழியர் ஒருவர் கூறியதாவது, "பேராசிரியர் பதவி மட்டுமல்லாமல், அலுவலக பணியாளர் பதவிகளும் ஏராளமாக காலியாக உள்ளன. இவை பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதனால், கல்லூரி நிர்வாக இயந்திரம் இயங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு தேவையான ஆவணங்களைக் கூட தயார் செய்ய முடியாத நிலையே தற்போது சென்னை சட்டக் கல்லூரியில் நிலவுகிறது.
பேராசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, கெஸ்ட் லெக்சரர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். தற்காலிகமாக வந்து செல்வதால், மாணவர்களுக்கு போதுமான பாடம் நடத்துவதில் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்" என்றார்.
