UPDATED : மே 14, 2011 12:00 AM
ADDED : மே 14, 2011 11:00 AM
ஐ.ஐ.டி.க்களை மறு ஆக்கம் செய்வது குறித்து ஆராய அனில் ககோட்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அளித்த பரிந்துரையில், ஐ.ஐ.டி.க்கள் பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான கட்டணத்தை ஓரளவிற்கு உயர்த்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
ஐ.ஐ.டி.க்களின் கடந்த கால நடைமுறைகளை ஒப்பிட்டு, வரும் காலத்தில் எந்தவிதமான மாற்றங்களை கொண்டு வந்தால், அவைகளின் செயல்பாடு சீராக இருக்கும் என்பதை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ககோட்கர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அக்குழு, தங்களது அறிக்கையை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபலிடம் அளித்துள்ளது. இந்த அறிக்கையில் இருக்கும் குறிப்புகள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகளை ஐஐடி கவுன்சில் விரைவில் எடுக்கவுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள், ஐ.ஐ.டி.க்களில் பிஎச்.டி. முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 1000மாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2020-25ஆம் கல்வியாண்டுகளில் 10,000 ஆக உயர்த்தப்பட வேண்டும்.
இதற்கு, இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் சிறந்த மாணவர்களை, பிஎச்.டி. செய்ய ஐ.ஐ.டி.க்கள் பரிந்துரைக்க வேண்டும். மேலும், ஐ.ஐ.டிக்களில் உள்ள பேராசிரியர்களின் எண்ணிக்கையை தற்போதைய 4000த்தில் இருந்து வரும் 10 ஆண்டுகளில் 16,000 ஆக அதிகரிக்க வேண்டும்.
மத்திய அரசின் நிதியுடன் செயல்படும் ஐ.ஐ.டி.க்கள் அல்லாத வேறு பல கல்வி நிலையங்களும், ஐ.ஐ.டி.க்களின் பேராசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளும் நிலைமையை உருவாக்க வேண்டும். இதர கல்வி நிலையங்கள் என்பது, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐஐஐடி) மற்றும் பிற கல்வி நிலையங்களாகும்.
மேலும், ஐ.ஐ.டி.க்கள், மத்திய அரசின் நிதிவுதவியை எதிர்பார்க்காமல், தங்களது கல்வி கட்டணத்தின் மூலமே செயல்படும் வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம், ஐ.ஐ.டி.க்கள் தங்களுக்குத் தேவையான நிதி உதவிக்கு ஏற்ப கல்வி கட்டணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்தும் போது, அவர்கள் பாதிக்கப்படாத வகையில், வங்கியில் கல்விக் கடன் பெற ஐ.ஐ.டி.க்களே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், மற்றொரு மிகப்பெரிய பரிந்துரையையும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய, கிராமப்புற மாணவர்களுக்கு முழுக் கல்விக் கட்டணத்தையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்ற மாணவர்களின் உயர் கல்வி முழுமைக்கும் ஆகும் அனைத்து கல்விக் கட்டணத்தையும் மத்திய அரசே செய்து விட வேண்டும் என்று கூறியுள்ளது.
ஏற்கனவே துவங்கி நன்றாக செயல்படும் ஐ.ஐ.டி.க்களில் சேரும் இதுபோன்ற மாணவர்களுக்கு ஒவ்வொருவருக்கும், ஆண்டுதோறும் ரூ.1.5 லட்ச ரூபாயை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். புதிய ஐ.ஐ.டி.க்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.50 கோடியை வரும் 5 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
