UPDATED : மே 19, 2011 12:00 AM
ADDED : மே 19, 2011 10:33 AM
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கு, அடுத்த மாதம் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, கூடுதல் மருத்துவ கல்வி இயக்குனர் ஷீலா கிரேஸ் சிவமணி கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: பி.எஸ்சி., (நர்சிங்) - பி.பார்ம்., - பி.பி.டி., - பி.ஏ., எஸ்.எல்.பி., (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல் தொடர்பான பட்டப்படிப்பு) ஆகிய மருத்துவம் சார் பட்டபடிப்புகளுக்கும், டிப்ளமோ நர்சிங் படிப்பிற்கும், 2011-12ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் டிப்ளமோ நர்சிங்கிற்கு 200 ரூபாயும், மற்ற பட்டப்படிப்புகளுக்கு 350 ரூபாயும் செலுத்த வேண்டும். இக்கட்டணத்தை, ( The Secretary, Selection Committee, Kilpak, Chennai 10 )என்ற முகவரிக்கு, டிடி எடுக்க வேண்டும்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பங்களை இலவசமாக பெற, சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வருக்கு ஒரு விண்ணப்ப கடிதம் எழுதி, அத்துடன் சாதி சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை அடுத்த மாதம் 2ம் தேதி, மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு ஷீலா கிரேஸ் சிவமணி கூறினார்.
