UPDATED : ஆக 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சி.பி.ராமசுவாமி அய்யர் பவுண்டேஷன் சார்பில் எழுத்தாளர் கே.வி.ராமன் எழுதிய ‘சென்னை பிராந்தியத்தின் முந்தைய வரலாறு’ (தி எர்லி ஹிஸ்டரி ஆப் தி மெட்ராஸ் ரீஜன்) என்ற நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில், எழுத்தாளர் முத்தையா வெளியிட, நூல் ஆசிரியர் ராமன் பெற்றுக்கொண்டார்.
நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை வகித்து, சி.பி.ராமசுவாமி அய்யர் பவுண்டேஷன் இயக்குனர் நந்திதா கிருஷ்ணன் பேசுகையில், “சென்னை நகரைப் பற்றிய பல அரிய தகவல்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் மட்டுமல்லாது பல்லாவரத்திலும் பல்லவ மன்னர்கள் குகைக் கோவில்களை உருவாக்கியுள்ள தகவல்களை நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, சோழர்கள் காலத்தில் திருமுல்லைவாயில் மற்றும் திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கோவில்கள் அமைக்கப்பட்ட வரலாறு குறித்தும் நூலில் தகவல்கள் உள்ளன.
மன்னராட்சி காலத்தில் துவங்கி அடுத்தடுத்து வந்த காலங்களில் சென்னை நகரம் எப்படியெல்லாம் மாற்றம் பெற்றது என்ற முழு விவரத்தையும் நூலினைப் படித்தால் தெரிந்துகொள்ள முடியும்,” என்றார்.
நூலை வெளியிட்டு எழுத்தாளர் முத்தையா பேசியதாவது:
அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் கல்வி பயில்வதில் தான் மாணவர்கள் இப்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். வரலாறு, சுற்றுச்சுழல் தொடர் பான கல்வி கற்பதில் மாணவர்களிடையே ஆர்வம் குறைவாக உள்ளது.
இதன் காரணமாக நமது பாரம்பரியம், கலாசாரம், வரலாற்றுத் தொன்மை போன்றவை இளைஞர்களுக்குத் தெரியாமல் மறைந்து போய் வருகிறது.
மாணவர்கள் தங்களது மாவட்ட அளவில் துவங்கி உலக அளவிலான வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். பாரம்பரியம் மிக்க கட்டடங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து வருகிறது. இவற்றின் முக்கியத்துவம் குறித்தும், காப்பாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பாரம்பரிய கட்டடங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க நம் நாட்டில் உரிய சட்டங்கள் இல்லாத நிலை உள்ளது. இதன் காரணமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களை சர்வசாதாரணமாக இடித்துத் தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் வேதனையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு முத்தையா பேசினார்.
முந்தைய காலங்களில் சென்னை நகரின் தோற்றம் தொடர்பாக நாராயண சுவாமியால் தொகுக்கப்பட்ட ஓவியங்களின் கண்காட்சியை முத்தையா துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 1754ம் ஆண்டு முதல் சென்னை நகரின் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், காட்சி அமைப்புகள் ஓவியங்களாக இடம்பெற்றுள்ளன.
பல்வேறு நாடுகளின் ஓவியர்கள் வரைந்த அரிய ஓவியங்கள் தொகுக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. 30ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியை, காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.

