எழுதிப் படித்தாலே வெற்றி தேடி வரும் - சாதனை மாணவர்
எழுதிப் படித்தாலே வெற்றி தேடி வரும் - சாதனை மாணவர்
UPDATED : மே 28, 2011 12:00 AM
ADDED : மே 28, 2011 10:13 AM
மதுரை செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் என்.எம். கார்த்திக் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 495 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நமது நிருபரிடம் அவர் கூறியதாவது : நான் பத்தாம் வகுப்பில் அடி எடுத்து வைத்தவுடனே, மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும் என்று முடிவு செய்தேன். தினமும் காலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் படித்தேன். விளையாட செல்வதற்கு பெற்றோர் அனுமதிக்கவில்லை.
ஆங்கில இலக்கணம், கணிதம் உட்பட சில பாடங்களுக்கு தினமும் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புகளில் தவறாமல் பங்கேற்றேன். முதல் நாள் நடத்திய பாடங்களை, அன்று மாலையும், மறுநாள் காலையும் எழுதி படித்தேன். இதனால்தான் என்னால் சாதிக்க முடிந்தது, என்றார்.
இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 97, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99.
இம்மாணவரால் மூன்றாவது முறையாக மாநில அளவில் இடம் பெற்று செயின்ட் மேரீஸ் பள்ளி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
தலைமையாசிரியர் வின்சென்ட் அமல்ராஜ் கூறுகையில், நன்கு படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, சிறப்பு வகுப்புகள் நடத்துகிறோம். அவர்களுக்கு பிற வகுப்பு ஆசிரியர்களை கொண்டும் பாடம் நடத்தினோம். டென்ஷன் இல்லாமல் தேர்வு எழுதவும், படிக்கவும் பயிற்சி அளித்தோம். இதன் காரணமாகவே தொடர்ந்து சாதனை படைக்கிறோம் என்றார்.
