அமெரிக்காவில் அறிவியல் படிப்புகளுக்கு ஆர்வம் குறைவு
அமெரிக்காவில் அறிவியல் படிப்புகளுக்கு ஆர்வம் குறைவு
UPDATED : ஆக 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: “அமெரிக்காவில் எந்த ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாலும், நன்கு படித்து சிறந்த கிரேடு மதிப்பெண்ணில் தேர்ச்சிப் பெற்றால், ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்ற முன்னணி பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரும் வாய்ப்பு உள்ளது,” என வெஸ்டர்ன் கனெக்டிகட் மாகாண பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவர்தன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் சார்பில், ‘அமெரிக்காவில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள்’ குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்ச்சி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்காவின் வெஸ்டர்ன் கனெக்டிகட் மாகாண பல்கலைக்கழகப் பேராசிரியர் கோவர்தன் கூறியதாவது:
அமெரிக்காவில் 28 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. மூன்றாயிரத்து 400க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. அறிவியல் படிப்புகளில் அமெரிக்க மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.
எனவே, இப்படிப்புகளில் இந்திய மாணவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் எந்த பல்கலைக்கழகத்தில், என்ன படிப்பு படிக்க விரும்புகிறீர்கள் என்பதை முதலிலேயே தெளிவாக திட்டமிட வேண்டும். அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் குறித்த அனைத்து விவரங்களும் இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
அமெரிக்காவின் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள், நன்கு படித்து சிறந்த கிரேடு மதிப்பெண்ணில் தேர்ச்சிப் பெற்றால், அடுத்த செமஸ்டரில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்ற முன்னணி பல்கலைக்கழகத்தில் தங்களது படிப்பைத் தொடர முடியும்.
முந்தைய பல்கலைக்கழகத்தில் தாங்கள் பெற்ற கிரெடிட்களை, அடுத்த பல்கலைக்கழகத்திற்கு மாற்றிக்கொள்ளும் வசதி அமெரிக்காவில் உள்ளது. இந்திய மாணவர்களுக்கு, அமெரிக்காவில் மருத்துவம் படிக்க இடம் கிடைப்பது மிகவும் கடினம். இவ்வாறு கோவர்தன் கூறினார்.

