UPDATED : ஆக 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “உலகமெங்கும் கரியமில வாயு (கார்பன்டை ஆக்சைடு) அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த அணு ஆற்றல் மற்றும் மரபுசாரா எரிசக்தியை பயன்படுத்துவது அவசியம்,” என, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் சிதம்பரம் பேசினார்.
கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியில் ‘புவி வெப்பமடைதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. பி.எஸ்.ஜி., அன்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினரும், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகருமான சிதம்பரம் பேசியதாவது:
உலகளவில் ‘புவி வெப்பமடைதல்’ முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வளர்ந்த நாடுகளில் வெளியிடப்படும் கரியமில வாயுக்களால், வளர்ந்து வரும் நாடுகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. கரியமில வாயு அதிகரித்து வருவதை தடுக்க, அணு ஆற்றல் மற்றும் மரபு சாரா எரிசக்தியை பயன்படுத்துவது அவசியம்.
உலக அளவில் அமெரிக்காவில் ஆண்டுக்கு 20.01 மெட்ரிக் டன், கரியமில வாயு வெளியிடப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் 9.40 மெ.டன், ஜப்பானில் 9.87 மெ.டன், சீனாவில் 3.60 மெ.டன், இந்தியாவில் 3.60 மெ.டன் கரியமில வாயு வெளியிடப்படுகிறது.
கரியமில வாயுக்கள் அதிரித்து வருவது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் படி, 21ம் நூற்றாண்டின் இறுதியில் (2090 -2099) புவியில் வெப்பத்தின் அளவு 1.1 முதல் 6.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும். அப்போது கடல் நீர் மட்டம் 0.18 முதல் 0.59 மீட்டர் வரை உயரும். வரும் 2050ம் ஆண்டிற்குள் கரியமில வாயு உற்பத்தியை 50 சதவீதம் கட்டுப்படுத்தினால், புவியில் பல்வேறு நல்ல மாறுதல்கள் ஏற்படும்.
புவி வெப்பமடைந்து வந்தாலும், கடந்த நூறு ஆண்டுகளில் மழை பெய்வதில் மாற்றம் ஏற்படவில்லை. சில பகுதிகளில் கூடுதலாகவும், இன்னும் சில பகுதிகளில் குறைவாகவும் பெய்துள்ளது. வெப்பம் அதிகரித்து வருவதால், உணவு தானியங்கள் உ<ற்பத்தி வெகுவாக குறையும்.
கடந்த நூற்றாண்டைக் காட்டிலும் தற்போது புவியின் மேற்பரப்பு வெப்பம் 0.4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் 1.06 முதல் 1.75 மில்லி மீட்டர் அளவுக்கு ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.
இச்சூழ்நிலையில், ஆற்றலை உருவாக்க புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுவது அவசியம். தற்போது ஏற்பட்டுள்ள தட்பவெப்ப அச்சுறுத்தலை சமாளிக்க, கூட்டு கண்டுபிடிப்புகள் தேவை. இவ்வாறு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் சிதம்பரம் பேசினார்.

