UPDATED : ஜூன் 06, 2011 12:00 AM
ADDED : ஜூன் 06, 2011 10:48 AM
நாடு முழுவதும், 12 மையங்களில் ஞாயிறு அன்று நடந்த ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., பொது நுழைவுத்தேர்வை, 37 ஆயிரத்து, 731 பேர் எழுதினர்.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், மொத்தம் உள்ள, 116 எம்.பி.பி.எஸ்., இடங்களில், 98 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, ஜிப்மர் அகில இந்திய அளவில் பொதுத் நுழைவுத்தேர்வு நடத்தி, மாணவர்களை தேர்வு செய்கிறது. மீதமுள்ள, 18 இடங்களை, மத்திய சுகாதார அமைச்சகம் நேரடியாக நிரப்புகிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர, இந்தாண்டு, 37 ஆயிரத்து, 906 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 37 ஆயிரத்து, 731 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவர்களுக்கான ஜிப்மர் பொது நுழைவுத்தேர்வு, நேற்று காலை, 10 மணி முதல், 12.30 மணி வரை, பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை, கவுகாத்தி, கோல்கட்டா, நாக்பூர், டில்லி, புதுச்சேரி, புனே, திருவனந்தபுரம், விஜயவாடா ஆகிய, 12 மையங்களில் நடந்தது.
டில்லியில், 8,464 பேரும், சென்னை - 6,388, திருவனந்தபுரம்-5,725, விஜயவாடா-3,245, கோல்கட்டா-3,680, பெங்களூரு-1,534, கவுகாத்தி-925, புனே-839, போபால்-685 பேரும் தேர்வெழுதினர். புதுச்சேரியில், ஜிப்மர் நர்சிங் கல்லூரி மற்றும் கல்வே காலேஜ், பெத்திசெமினர், உப்பளம் இமாகுலேட் , விவேகானந்தா, தொன் பாஸ்கோ, செவன்த்டே, செயின்ட் பேட்ரிக், கதிர்காமம் மேல்நிலைப்பள்ளி ஆகிய, ஒன்பது மையங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது. நான்காயிரம் பேர் தேர்வெழுதினர்.
விரல் ரேகை பதிவு: எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வையொட்டி, தேர்வு மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆள்மாறாட்டத்தைத் தடுக்க, தேர்வெழுதிய மாணவர்களின் விரல் ரேகை, கையெழுத்து பதிவு செய்யப்பட்டது. நேர்காணலின் போது விரல் ரேகை மீண்டும் ஒப்பிடப்பட்டு சேர்க்கை அனுமதி வழங்கப்பட உள்ளது.
