UPDATED : ஜூன் 11, 2011 12:00 AM
ADDED : ஜூன் 11, 2011 11:52 AM
சென்னை பல்கலையின் தொலைதூரக் கல்வி திட்டத்தில் பயிலும் ராணுவத்தினர் உள்ளிட்ட சில சிறப்பு பிரிவினருக்கு, மொத்த கல்விக் கட்டணத்தில் 20 சதவீதம் வரை, சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல் ஊனமுற்றோருக்கு 100 சதவீதம் கட்டணச் சலுகை உண்டு. இந்நிலையில், சமீபத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், சிறப்பு பிரிவினருக்கான கட்டணச் சலுகையை 20 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்தி முடிவு எடுக்கப்பட்டது.
இப்பிரிவில், பத்திரிகையாளர்கள், போலீசார், ஆசிரியர்கள் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 50 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவர் என, பல்கலை வட்டாரம் தெரிவித்தது.
தொலைதூரக் கல்வியில், எம்.பி.ஏ. நான் செமஸ்டர் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இனி, செமஸ்டர் முறையிலும் எம்.பி.ஏ. நடத்தப்பட உள்ளது.
குறைந்த வருவாயுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற மாணவர்கள் ஆகியோருக்கு, முற்றிலும் இலவசக் கல்வி அளிக்கும் திட்டத்தை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் சென்னை பல்கலை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 140 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் தகுதியான மாணவர்களுக்கு, இலவசக் கல்வி பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
