பி.எட்., கல்லூரியில் அரசு பங்கீடு விதிமுறை உருவாக்க நடவடிக்கை
பி.எட்., கல்லூரியில் அரசு பங்கீடு விதிமுறை உருவாக்க நடவடிக்கை
UPDATED : ஆக 21, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: “பொறியியல், மருத்துவம் ஆகிய தொழிற்படிப்புகளில் இருப்பதைப் போல, அடுத்த ஆண்டில் இருந்து தனியார் பி.எட்., கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடபங்கீட்டிற்கான விதிமுறைகளை உருவாக்கவும், கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாபன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து பி.எட்., கல்லூரிகளையும் இணைத்து, ஒரே மாதிரியான கல்வி, ஆராய்ச்சி மற்றும் மதிப்புக் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் அனைத்து பி.எட்., கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த ஆண்டு, சென்னை பல்கலைக் கழகத்தின் பி.எட்.,பாடத்திட்டம் பயன்படுத்தப்படும்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திற்கான தனி பாடத்திட்டத்தை வடிவமைக்கும் பணி துவங்கி விட்டது. இப்பாடத்திட்டம் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டிலிருந்து பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை பல்கலைக்கழகமே நடத்தும். நாட்டில் 2015ம் ஆண்டில் 15 லட்சம் பி.எட்., பட்டதாரிகள் தேவைப்படுவர் என என்.சி.டி., கூறுகிறது.
தமிழகத்தில் 2015ம் ஆண்டில் ஒரு லட்சம் பி.எட்., பட்டதாரிகள் தேவைப்படுவர். தமிழகத்தில் உள்ள அனைத்து பி.எட்., கல்லூரிகளும், தங்களுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அங்குள்ள 15-35 வயது வரையிலான படிக்காத இளைஞர்களுக்கு அடிப்படைக் கல்வி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக் கழகத்தில், கல்வி நுட்பவியல், பாடத்திட்ட வடிவமைப்பு, கல்வி நிர்வாகம் மற்றும் மேற்பார்வை, கல்வி திட்டமிடல் மற்றும் நிதி நிர்வாகம், ஒப்பீட்டுக் கல்வி, கல்வி மதிப்பிடுதல் ஆகிய ஆறு துறைகள் புதிதாக ஏற்படுத்தப்படும். இத்துறைகளில் முதுநிலை படிப்பில் 25 மாணவர்கள் வரையும், எம்.பில்., படிப்பில் 10 மாணவர்கள் வரையும், பி.எச்டி., படிப்பில் ஐந்து மாணவர்கள் வரையும் சேர்க்கப்படுவர்.
அடுத்த ஆண்டு முதல் பொறியியல், மருத்துவம் ஆகிய தொழிற்படிப்புகளில் இருப்பதைப் போல, தனியார் பி.எட்., கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடபங்கீடு குறித்து விதிமுறைகள் உருவாக்கப்படும். அதேபோல, தனியார் பி.எட்., கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பத்மநாபன் கூறினார்.

