அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சிலிங்
அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கவுன்சிலிங்
UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM
ADDED : ஜூன் 16, 2011 10:20 AM
அரசு வெளியிட்ட அரசாணை: நடப்பு கல்வியாண்டிற்கான, அரசினர் பொறியியல் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசினர் சிறப்புத் தொழில்நுட்ப பயிலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு மூலம், பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளது.
பணி ஓய்வு, பணித் துறப்பு, பணி நீக்கம், பதவி உயர்வு, மரணம், புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுதல் மற்றும் நிர்வாக காரணங்களால் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு மட்டும் பொது மாறுதல் செய்ய வேண்டும். ஒரு ஆசிரியருக்கு மாறுதல் தருவதற்காக, மற்றொரு ஆசிரியரை மாற்றக் கூடாது.
ஒரு காலிப் பணியிடத்திற்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கோரினால், பட்டியலில் உள்ள நெறிமுறைகளை கையாண்டு, முன்னுரிமை வழங்க வேண்டும்.
ஒரே பணியிடத்திற்கு, ஒன்றிற்கு மேற்பட்டவர் மாறுதல் கோரினால் அதிக காலம் பணிபுரிந்தவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களின் பட்டியலைக் கொடுத்து, அவர்கள் விரும்பிய இடத்தில் காலிப் பணியிடம் இருந்தால் மட்டுமே மாறுதல் அளிக்கப்படும். கலந்தாய்வு முடிந்தவுடன், அந்த மையத்தில் மாறுதல் உத்தரவு அளிக்கப்படும். அனைத்து இட மாற்றங்களும் ஜூன் இறுதிக்குள் முடிக்க வேண்டும்.
புதிதாக பணியில் சேர்ந்தவர்கள், ஒரு முழுக் கல்வி ஆண்டாவது பணியில் சேர்ந்த இடத்தில் பணிபுரிந்தால் மட்டுமே மாறுதல் கோர தகுதி பெறுவர்.
நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டவர்கள், மூன்று ஆண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. ஒருமுறை நேர்காணல் மூலம், மாறுதல் பெற்றவர் இரண்டு ஆண்டுகளுக்கு மாறுதல் கோரி விண்ணப்பிக்க கூடாது. மாறுதல் பயணப்படி வழங்கப்படாது. இவ்வாறு அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
