தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல் பட்டதாரிகளுக்கு கட்டண சலுகை?

முதல் பட்டதாரிகளுக்கு கட்டண சலுகை?

முதல் பட்டதாரிகளுக்கு கட்டண சலுகை?


UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM

ADDED : ஜூன் 17, 2011 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM ADDED : ஜூன் 17, 2011 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முந்தைய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட குடும்பத்தின் முதல் பட்டதாரிகளுக்கான கட்டணச் சலுகை திட்டம், இந்த கல்வியாண்டில் தொடருமா, இல்லையா என்பது தெரியாமல், மாணவர்களும், பெற்றோரும் தவித்து வருகின்றனர்.


விரைவில், பொறியியல் கவுன்சிலிங் துவங்க இருப்பதால், இத்திட்டம் குறித்து, தமிழக அரசு முடிவை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்தாண்டு ஆட்சியில் இருந்த தி.மு.க., அரசு, குடும்பத்தின் முதல் பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணம் முழுவதையும், அரசே வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. ஒரு குடும்பத்தில், பெற்றோர் உட்பட யாருமே பட்டதாரியாக இல்லாத நிலையில், அக்குடும்பத்தில் இருந்து, முதல் முறையாக, பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, அரசே ஏற்க, வழிவகை செய்து உத்தரவிடப்பட்டது.


அதன்படி, கடந்த கல்வியாண்டில் பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர்ந்த மாணவர்களில், 70 ஆயிரம் மாணவர்கள் பலன் பெற்றனர். இவர்களுக்காக, அப்போதைய அரசு, 270 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகையை வழங்கியது. தகுதியான மாணவர்கள், வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, சான்றிதழை பெற்று, சம்பந்தப்பட்ட கல்லூரியில் செலுத்தினால், அவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்தும். அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு மட்டும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.


இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., அரசு நடந்து வருகிறது. கடந்த ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, இரண்டாவது ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுமா, புதியதாக தொழிற்கல்வி படிப்புகளில் சேர உள்ள முதல் பட்டதாரி மாணவர்களுக்கு, அரசின் கட்டணச் சலுகை கிடைக்குமா என தெரியாமல், மாணவர்களும், பெற்றோரும் தவித்து வருகின்றனர்.


பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், விரைவில் துவங்க உள்ளது. இதனால், இத்திட்டம் குறித்து தமிழக அரசின் முடிவை, மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இத்திட்டம் குறித்து, கவர்னர் உரையில் எந்த வித அறிவிப்பும் வெளியாகாததால், மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


இது குறித்து, கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கருணாகரனிடம் கேட்ட போது, "இத்திட்டம் குறித்து, அரசிடம் இருந்து இதுவரை எந்தவிதமான உத்தரவும் வரவில்லை. அதனால், முதல் பட்டதாரிகளுக்கு கட்டணச் சலுகை வழங்கும் திட்டம், இந்த கல்வியாண்டில் தொடர்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us