UPDATED : ஜூன் 18, 2011 12:00 AM
ADDED : ஜூன் 18, 2011 01:58 PM
கடந்த ஆண்டுகளில் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., இடங்கள், பல லட்சகணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு கல்லூரியில் அதிகபட்சமாக ஒரு சீட், ஒன்பது லட்சம் ரூபாய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 455 பி.இ., - பி.டெக்., கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 446 கல்லூரிகள் பி.இ., பி.டெக்., படிப்புகளும், ஒன்பது கல்லூரிகள் பி.ஆர்க்., படிப்பும் வழங்குகின்றன. பி.இ., பி.டெக்., படிப்புகளில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 870 இடங்களும், பி.ஆர்க்., படிப்பில் 620 இடங்களும் உள்ளன. இவற்றில் அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் எண்ணிக்கை 28 கல்லூரிகள் மட்டுமே.
மீதமுள்ள 427 கல்லூரிகள் தனியாருக்கு சொந்தமானவை. சிறுபான்மை தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும், சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களும் மாநில அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. தனியார் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. மாநில அரசு ஒதுக்கீட்டில், தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு ஒற்றைச் சாளர கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும், முறையாக அம்மாணவர் சேர்க்கை நடைபெறுவதில்லை. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை கண்காணிக்க, ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் கல்லூரிகள் தங்கள் இஷ்டத்திற்கு கட்டணத்தை நிர்ணயித்துக் கொண்டு, கல்லூரிகளில் பி.இ., - பி.டெக்., இடங்களை நிரப்புகின்றன.
பிளஸ் 2வில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், பல லட்சம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்து கல்லூரிகளில் சேருகின்றனர். நன்கொடை வசூலிப்பது தவறு என தமிழக அரசு சட்டம் இயற்றியிருந்தும், அது காகிதத்தில் மட்டுமே உள்ளது.
முன்னணி கல்லூரிகளில் இ.சி.இ., மற்றும் மெக்கானிக்கல் பிரிவுக்கு எட்டு லட்சம் ரூபாய் வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை, இ.இ.இ., மற்றும் சிவில் பிரிவிற்கு நான்கு லட்சம் ரூபாய் வரை, ஐ.டி., பிரிவுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்படுகிறது.
இரண்டாம் தரக் கல்லூரிகளில் இ.சி.இ., மற்றும் மெக்கானிக்கல் பிரிவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை, இ.இ.இ., ஐ.டி., சிவில் பிரிவுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்படுகிறது.
சென்னையை அடுத்துள்ள முன்னணி கல்லூரியில் இ.சி.இ., பிரிவில் சேர மாணவர்கள், ஒன்பது லட்சம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துள்ளனர். நன்கொடை வழங்கி கல்லூரிகளில் இடம் வாங்கித் தர புரோக்கர்களும் பெருமளவில் செயல்படுகின்றனர்.
நன்கொடையாக பெறும் தொகைக்கு எவ்வித ரசீதும் இல்லாததால், போலீஸ் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளின் சோதனைகளில் கல்லூரிகள் சிக்குவதில்லை. தனியார் பொறியியல் கல்லூரிகள், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான மே மாதத்திலேயே பெரும்பாலும் நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையை முடித்து விடுகின்றன. அதன் பிறகு, உயர்கல்வித் துறை பெயருக்கு ஆய்வு நடத்துவதாகக் கூறி, கல்லூரிகளுக்கு சென்று ஆவணங்களை கைப்பற்றுகின்றன.
கடந்த முறை நடத்தப்பட்ட ஆய்வில், கல்லூரிகள் மாணவர்களுக்கு அனுப்பிய சர்க்குலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக பிரபலப்படுத்தினர். இவ்வாறு ஆய்வில் சிக்கியதாக எந்தக் கல்லூரி மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.
நன்கொடை வசூலை வெளி உலகிற்குத் தெரிவிக்க விரும்பும் சிலர், கல்லூரிகளுக்கு சென்று ரகசிய கேமராவில் படம் பிடிப்பதைத் தவிர்க்க, பல கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடைபெறும் இடங்களுக்குள் நுழைபவர்களை, கடுமையாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். மொபைல் போன், பேனா உள்ளிட்ட பொருட்களை வெளியே வைத்து விட்டுச் செல்லுமாறு கூறுகின்றனர்.
நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க, இந்த இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரத்தை, உயர்கல்வித் துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதன் மூலம் தகுதியான மாணவர்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளதா என்ற விவரத்தை அறிய முடியும்.
