UPDATED : ஆக 23, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ஊனமுற்ற தொழில் முனைவோர் செலுத்த வேண்டிய ஐந்து சதவீத பங்குத் தொகையை, அரசே ஏற்கவும், அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் வேலைவாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை வழங்கவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
உடல் ஊனமுற்றோர் சங்கங்களின், கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை கடந்த 19ம் தேதி சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்று, விரைவில் அரசாணைகள் வெளியிடப்படுமென முதல்வர் கருணாநிதி உறுதியளித்திருந்தார்.
அதன்படி, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பிரதமரின் ஊனமுற்றோருக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்று சுயவேலைவாய்ப்புப் பெற வசதியாக, அத்திட்டத்தில் ஊனமுற்றோர் செலுத்த வேண்டிய ஐந்து சதவீத பங்குத் தொகையை தமிழக அரசே ஏற்குமென உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பார்வையற்றோருக்கு வழங்கப்படுவது போல, அனைத்து வகை ஊனமுற்றோருக்கும், வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர, ஊனமுற்றோர் வேலை வாய்ப்புப் பெறும் தகுதியை மேம்படுத்தும் வகையில், மூன்று ஆண்டுகளில், மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகளுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையங்களை அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் துவக்கவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

