UPDATED : ஜூன் 22, 2011 12:00 AM
ADDED : ஜூன் 22, 2011 11:04 AM
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்காக இந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கிற்காக, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 353 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள்:
கவுன்சிலிங்கின் ஒரு பகுதியாக, வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூன் 20ம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு 5 சதவீதமும், இதர நாடுகளில் வாழும் இந்திய மாணவர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கப்படும். மொத்தம் உள்ள 345 இடங்களில் 310 பேருக்கு நேற்று கவுன்சிலிங் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டின் மூலம் 148 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு:
விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கு, ஜூன் 28, 29 தேதிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 30ம் தேதி கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஒதுக்கீட்டு அடிப்படையில் இடம் பெற 3,457 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதர பட்டம் பெற்ற மாணவர்கள்:
இதர பட்டம் பெற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும். இதற்கு, 5,578 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு 464 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பொது கவுன்சிலிங்:
இந்த ஆண்டு பிளஸ் 2 தேறிய மாணவர்களுக்கான பொது கவுன்சிலிங், ஜூலை 8ம் தேதி துவங்குகிறது. இது, தொடர்ந்து 35 நாட்கள் நடைபெறும். இந்த கவுன்சிலிங்கில், தமிழகத்தில் உள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசுக்கான ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்படும். இந்த கவுன்சிலிங்கில், 89 ஆயிரத்து 298 மாணவர்களும், 59 ஆயிரத்து 55 மாணவியரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆண்டு 23 கல்லூரிகளில் தமிழில் பொறியியல் பாடங்கள் கற்றுத்தரப்படும். ஒற்றைச் சாளர கவுன்சிலிங் மூலம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது கடந்த ஆண்டை விட 5,000 இடங்கள் அதிகம். 2009ம் ஆண்டு கவுன்சிலிங் முடிந்த பிறகு 51 ஆயிரத்து 462 இடங்கள் காலியாக இருந்தன; 2010ம் ஆண்டு 31 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. கடந்த ஆண்டு விண்ணப்ப விற்பனை, ஒரு லட்சத்து 78 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 509 ஆக குறைந்துள்ளது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் வந்துள்ளன.