அரசு பணிகளில் காலியிடம் பட்டியல் தர கோர்ட் உத்தரவு
அரசு பணிகளில் காலியிடம் பட்டியல் தர கோர்ட் உத்தரவு
UPDATED : ஆக 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர், சுப்ரீம் கோர்ட் பரிந்துரைப்படி, மீண்டும் பணியில் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், பணி நீக்கம் செய்யப்பட்ட இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 14 ஆயிரத்து 500 பேர் புதிதாக அரசு பணியில் நியமிக்கப்பட்டனர். இவர்களில் நான்காயிரத்து 103 பணியிடங்களுக்கான சிறப்பு போட்டித் தேர்வை அரசு அறிவித்தது. அதில், குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் தற்காலிக இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், ‘பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் தற்காலிக ஊழியர்கள் 10 ஆயிரத்து 940 பேர் கலந்து கொண்டனர். நான்காயிரத்து 103 பேரை மட்டும் தேர்ந்தெடுத்தால், மீதியுள்ள ஊழியர்கள் பணி இழக்க வேண்டியது வரும்.
ஆனால், அரசு பணிகளில் உதவியாளர்கள் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளன. எனவே, தேர்வில் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்து பணியில் நியமிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி ஜோதிமணி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் நளினி சிதம்பரம், வக்கீல் அருண் நடராஜன் ஆஜராயினர். அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

