UPDATED : ஜூன் 30, 2011 12:00 AM
ADDED : ஜூன் 30, 2011 11:06 AM
தீ பொறியியல் என்பது(தீ தற்காப்பு பொறியியல் மற்றும் தீ பாதுகாப்பு பொறியியல் என்றும் அழைக்கப்படுகிறது), அறிவியலையும், பொறியியல் விதிமுறைகளையும் பயன்படுத்தி, தீயிலிருந்தும், புகையிலிருந்தும் மக்களையும், அவர்களின் உடமைகளையும் மற்றும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதாகும். தீ பொறியியல் படிப்பில் கீழ்கண்ட பல பிரிவுகள் அடங்கியுள்ளன. ஆக்டிவ்
தீ பொறியாளர்கள், தீ சார்ந்த ஆபத்துக்களைக் கண்டறிந்து, அதற்கேற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். மேலும், தீயின் விளைவுகளைப் பற்றியும் விளக்குகிறார்கள். தீ தடுப்பு விஷயத்தில், கட்டிட கலை நிபுணர்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களுக்கு உதவுகிறார்கள். இதைத்தவிர, தீ ஏற்பட்டதற்கான காரணங்களைக் கண்டறியும் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். உலகின் புகழ்பெற்ற வான்ஆராய்ச்சி அமைப்பான நாசா, பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் தீ பொறியாளர்களை ஈடுபடுத்துகிறது.
தீ பொறியியலின் வரலாறு
இதன் வரலாறு பண்டைய ரோமானியர் காலத்திலிருந்து தொடங்குகிறது. நீரோ என்ற மன்னன் ஆண்டபோது, ரோம் நகரில் மாபெரும் தீ விபத்து ஏற்பட்டு, ஏறக்குறைய அந்த நகரமே அழிந்துவிட்டது என்பதை வரலாற்றில் படித்திருப்போம். ரோம் நகரை மறுநிர்மானம் செய்கையில், மீண்டும் அப்படியொரு கோர விபத்து நேராமல், நகரை கட்டமைக்கும் வகையில் வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.
தீ பொறியியல் படிப்பானது, தொழில்புரட்சி உச்சத்தில் இருந்த காலத்தில், (முக்கியமாக 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சிவில், மெக்கானிக்கல் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் துறைகளிலிருந்து பிரிந்து, ஒரு முக்கிய மற்றும் மதிப்புவாய்ந்த பாடமாக உருப்பெற்றது. ஏனெனில், தொழிற்சாலைகளை, குறிப்பாக பருத்தி ஆலைகளை நெருப்பிலிருந்து பாதுகாப்பது முக்கிய விஷயமாக இருந்தது. தீ பொறியியல் துறையின் வளர்ச்சியில், காப்பீட்டுத் துறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கடந்த 1903ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள ஆர்மர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில், தீ பொறியியல் துறையில் முதல் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தீ பொறியியல் துறை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த துறையாக ஆனது.
