UPDATED : ஜூலை 03, 2011 12:00 AM
ADDED : ஜூலை 03, 2011 01:15 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை அருகேயுள்ள அரசு பள்ளிக்கு, மாணவர்கள் வருவதற்கு தயங்குவதால், பள்ளிக்கு பூட்டு போடும் நிலை உருவாகியுள்ளது.
வால்பாறை
அடுத்துள்ளது முடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளிக்கு தோணிமுடி, தாய்முடி, வாகமலை, ஹைபாரஸ்ட், கெஜமுடி பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். 1961ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பள்ளி படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு, 2005ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்தது. அரசு உயர்நிலைப்பள்ளியாக இருந்தபோது 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். சமீபகாலமாக இப்பள்ளியை சுற்றிலும் காட்டெருமை, யானை போன்ற வனவிலங்குகள், பகல் நேரத்திலேயே படையெடுக்கின்றன. சிறுவர்களை குறி வைத்து சிறுத்தை தாக்குவதால், மாணவர்கள் பள்ளிக்கு வரத் தயங்குகின்றனர்.முடீஸ்
டவுன் பகுதியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் இப்பள்ளி வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளதால், போதுமான பஸ் வசதி இல்லை. இதுவும் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தயங்குவதற்கு ஒரு காரணம். இந்தக் கல்வியாண்டில் இப் பள்ளியில் மொத்தம் 44 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். 6 மற்றும் 7ம் வகுப்புகளில் ஒரு மாணவர் கூட இல்லை. 8ம் வகுப்பில் 3 மாணவர்களும், 9ம் வகுப்பில் 9 மாணவர்களும், 10ம் வகுப்பில் 15 மாணவர்களும், 11ம் வகுப்பில் 9 மாணவர்களும், 12ம் வகுப்பில் 8 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். ஆரம்பத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்த இப் பள்ளியில் தற்போது 44 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.இதுகுறித்து
பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. பள்ளி நேரத்தில் பாம்புகள் வகுப்பறைக்குள் படையெடுக்கின்றன. சிறுத்தை, காட்டெருமையும் உலா வருகின்றன. இதனால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்ல பஸ் வசதி இல்லை. வனப்பகுதிக்கு மத்தியில் பள்ளி அமைந்துள்ளதால் எந்த நேரத்திலும் வனவிலங்குகள் பள்ளி வளாகத்தில் புகுந்துவிடும் நிலை உள்ளது. மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு காலை, மாலை கூடுதல் பஸ் இயக்குவதுடன் பள்ளியை சுற்றிலும் மின் வேலி அமைத்தால் மட்டுமே மாணவர்கள் பாதுகாப்பாக படிக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.