UPDATED : ஜூலை 06, 2011 12:00 AM
ADDED : ஜூலை 06, 2011 10:19 AM
சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை, உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை ஆய்வு செய்ய தலைமைச் செயலர் தலைமையில் எட்டு உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழுவின் அறிக்கை, ஐகோர்ட்டில் பதிவாளர் ஜெனரலிடம் அளிக்கப்பட்டது.
அந்த அறிக்கையை சீலிட்ட உறையில், தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் பெஞ்ச் முன், பதிவாளர் ஜெனரல் தாக்கல் செய்தார். அறிக்கைக்கு பதிலளிக்க, அதன் நகல்களை வழங்குமாறு மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கோரினர். இதற்கு அட்வகேட் ஜெனரல் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. விசாரணையை, 11ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும், அப்போது தான் குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்க ஏதுவாக இருக்கும் என்றும் மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர்.
வழக்கறிஞர்களின் கருத்துக்களைக் கேட்ட முதல் பெஞ்ச், மாணவர்களின் படிப்புக்கு இடையூறு இருப்பதால், இவ்வழக்கு விசாரணையை தள்ளிவைக்க விரும்பவில்லை எனக் கூறியது.
7ம் தேதி விசாரணை துவங்கும் என்றும், வழக்கறிஞர்கள் வாதங்களை முடிக்கும் வரையில் விசாரணை தொடரும் என்றும் முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. அனைத்து மனுக்களையும், 7ம் தேதிக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டது.
குழுவின் அறிக்கையில், "சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் தரமானதாக இல்லை. அடிப்படை விஷயங்களை கருத்தில் கொள்ளாமல், குறைவான காலத்தில் அவசரகதியாக பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. பாடப் புத்தகங்கள் தரம் குறைவாகவும், தவறான தகவல்கள் இடம் பெற்றதாகவும் உள்ளது. இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை பயன்படுத்த முடியாது. அதில் ஏராளமான மாற்றம் செய்யப்பட வேண்டியதுள்ளது" என, கூறப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி வழக்கில், அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் நலன் தொடர்பான இவ்வழக்கில், விசாரணையை விரைவில் முடித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதில் உயர்நீதிமன்றம் அக்கறையுடன் உள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சவுகான், சுதந்திரகுமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், குழு அறிக்கை தாக்கல் செய்த பின், ஒரு வாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அறிக்கைக்குப் பதிலளிக்க 11ம் தேதி வரை வழக்கறிஞர்கள் அவகாசம் கோரியும், அதை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. மாணவர்களின் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், விசாரணையை 7ம் தேதியே துவக்குவதாக, நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே, இவ்வழக்கில் அடுத்த வாரத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
