வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்ஜி. படிப்புகளை பதிவு செய்ய ஏற்பாடு
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்ஜி. படிப்புகளை பதிவு செய்ய ஏற்பாடு
UPDATED : ஜூலை 06, 2011 12:00 AM
ADDED : ஜூலை 06, 2011 10:31 AM
இது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பு: பி.இ., பி.டெக்., பொறியியல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 61 ஆயிரத்து 200 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொறியியல் பதிவுகள், சென்னை மற்றும் மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில், 16 வட மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும், மதுரையில் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள 16 மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும் பதிவு செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் காலவிரயம், அலைச்சல் மற்றும் போக்குவரத்து செலவுகளை தவிர்க்க, தற்போது அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பொறியியல் பட்டப்படிப்புகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யச் செல்லும் போது, பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ் மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
உள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், குடும்ப அடையாள அட்டையில் உள்ள முகவரி அடிப்படையில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வர். பதிவு செய்த மாவட்டத்திலேயே, வேலைவாய்ப்பு அடையாள அட்டை உடனே வழங்கப்படும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
