UPDATED : ஜூலை 08, 2011 12:00 AM
ADDED : ஜூலை 08, 2011 11:07 AM
தமிழகத்தை, ராகிங் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும், என்று, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்தார்.
கல்வி நிறுவனங்களில், ராகிங் முறையை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில அளவிலான கண்காணிப்பு பிரிவின் முதல் கூட்டம், கவர்னர் பர்னாலா தலைமையில், ராஜ்பவனில் நேற்று நடந்தது.
இதில், பர்னாலா பேசியதாவது: கல்வி நிறுவனங்களில், ராகிங் முறையே இல்லை என்பதை உறுதி செய்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். தமிழகம், ராகிங் இல்லா மாநிலமாக திகழ வேண்டும். பொது நிர்வாகம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்து முயற்சிகளை எடுத்தால், ராகிங் கொடுமையை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
ராகிங் பற்றிய புகார் எப்போது வந்தாலும், போலீஸ் உடனடியாக வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும், கண்காணிப்பு பிரிவுகள் முறையாக செயல்பட வேண்டும். இவ்வாறு பர்னாலா பேசினார்.
கூட்டத்தில், போலீஸ் இணையதளத்தில், ஆன் லைன் மூலம் பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள், போலீஸ் கமிஷனர்கள் கொண்ட மாவட்ட அளவிலான கமிட்டிகள், பல்வேறு விழிப்புணர்வு செயல்கள் மூலம், ராகிங் நடக்காதிருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், உயர்கல்வி துறை முதன்மைச் செயலர் கண்ணன், உள்துறை முதன்மைச் செயலர் ரமேஷ் ராம் மிஸ்ரா, டி.ஜி.பி., ராமானுஜம், கவர்னரின் செயலர் சம்பு கல்லோலிகர், உயர்கல்வித் துறை இணைச் செயலர் உமா மகேஸ்வரி, துணைச் செயலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.
