UPDATED : ஜூலை 13, 2011 12:00 AM
ADDED : ஜூலை 13, 2011 10:19 AM
கரூர் வைஸ்யா வங்கி, பேங்க் ஆப் மைசூர், யூகோ வங்கி, இந்தியன் வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகிய ஒன்பது வங்கிகள், பல்கலை வளாகத்தில் சிறப்பு கவுன்டர்களை அமைத்துள்ளன.
மாணவர்களின் பெயர், முகவரி, தேர்வு செய்த கல்லூரி, தேர்வு செய்துள்ள பாடப்பிரிவு, கட்-ஆப் மதிப்பெண் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொண்டு, மாணவர்களின் இருப்பிட முகவரிக்கு அருகில் உள்ள வங்கிக் கிளையின் மேலாளருக்கு கடிதம் கொடுத்து, இங்குள்ள அதிகாரிகள் பரிந்துரை செய்கின்றனர்.
கார்ப்பரேஷன் வங்கி அதிகாரி விஜய் கூறும்போது,"நான்கு லட்சம் ரூபாயில் இருந்து, 20 லட்சம் ரூபாய் வரை மாணவர்களுக்கு கடன் வழங்குகிறோம். மாணவர்கள், நான்கு ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டண விவரங்களை, கல்லூரிகளில் இருந்து பெற்று, விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். எங்களிடம் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு, கடன் வழங்கப்படுகிறதா என்பதை நாங்கள் உறுதி செய்யவும் தவறுவதில்லை" என்றார்.
இந்தியன் வங்கி மேலாளர் வெங்கட்ராமன் கூறும்போது,"இதுவரை 316 மாணவர்கள், லோன் கேட்டு, எங்களிடம் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு, இதேபோன்ற சிறப்பு கவுன்டரில் பதிவு செய்த மாணவர்களில், 900 பேருக்கு கடன் வழங்கினோம். இந்த ஆண்டும் அதிகமான மாணவர்களுக்கு கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இந்தியன் வங்கி மேலாளர் வெங்கட்ராமன் கூறும்போது, "நான்கு ஆண்டுகளுக்கு மாணவர்கள், கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. படிப்பை முடித்ததும் வேலை கிடைத்துவிட்டால், அடுத்த ஆறு மாதங்களுக்குப்பின், கடன் தொகையை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். வேலை கிடைக்காவிட்டால், ஒரு ஆண்டுக்குப்பின் கடன் தொகையை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும்" என்றார்.
ஒவ்வொரு வங்கியிலும், ஒவ்வொரு விதமான வட்டி வகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வங்கிகளில், 12 முதல் 13 சதவீதம் வரை உள்ளது. "உயர்கல்வி படிக்க, வங்கிகளில் கடன் கேட்கும் மாணவர்களிடம் எந்தவித உத்தரவாதமும் கேட்கக் கூடாது. குறிப்பாக, சொத்து இருக்கிறதா, பெற்றோர் வருமானம் என்ன போன்ற விவரங்களை எல்லாம் கேட்கக்கூடாது. அனைவருக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும்" என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஒவ்வொரு பொது நிகழ்ச்சிகளிலும் பேசி வருகிறார்.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது,"கடன் வழங்க உத்தரவாதம் எதுவும் கேட்க மாட்டோம் என வெளியில் கூறினாலும், உண்மையில் பெற்றோரின் வருமானம், அவர்களிடம் சொத்து ஏதாவது இருக்கிறதா என்ற விவரங்களை ஆராய்ந்த பிறகே கடன் வழங்குகிறோம். பெரிய தொகையை கடனாக வழங்கும்போது, ரிஸ்க் எடுக்க, எந்த வங்கிகளும் தயாரில்லை; இதுதான் உண்மை" என்றார்.
