UPDATED : ஜூலை 28, 2011 12:00 AM
ADDED : ஜூலை 28, 2011 03:42 PM
மலேசியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க அந்நாடு முடிவெடுத்துள்ளது.
அந்நாட்டு உள்துறை அமைச்சரின் பொது மேலாளர் மஹ்மூத் ஆதாம் கூறுகையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து நீண்ட காலமாகவே திட்டமிட்டு வருகிறோம். அடையாள அட்டையை கொண்டு வருவதற்கு முன்பு, அதற்கான நடைமுறைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை துரிதப்படுத்த முடிவெடுத்துள்ளோம் என்றார்.
மாணவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள அனைத்துத் தகவல்களும், இந்த அடையாள அட்டையில் இடம்பெறும் வகையில், உருவாக்கப்பட உள்ளது. இதனால், அடையாள அட்டை, மலேசிய அரசு அங்கீகாரம் பெற்ற ஒன்றாக அமையும்.
தற்போது மலேசியாவில் அனைத்து வெளிநாட்டுக்காரர்களும், தங்களுடன் பாஸ்போர்ட்டை வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எப்போது எந்த காரணத்திற்காக காவல்துறையினர் கேட்டாலும் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். இந்த அடையாள அட்டை வந்துவிட்டால், மாணவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு கருவியாகவும் அமைந்துவிடும்.
இந்தப் பணியில் உயர் கல்வி, கல்வி மற்றும் உள்துறை அமைச்சகம், காவல்துறை என பல்வேறு நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.
பாஸ்போர்ட்டிற்கு பதிலாக அடையாள அட்டை மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் திட்டமாக இருக்கும் என்பதால் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
