மருத்துவ கலந்தாய்வை விரைவில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ கலந்தாய்வை விரைவில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு
UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM
ADDED : ஜூலை 30, 2011 11:48 AM
சென்னையை அடுத்த மாங்காட்டில் உள்ள முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி சுயநிதி மருத்துவக் கல்லூரியாகும். இதில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் படிப்பில் 150 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில் 75 இடங்கள் அரசு ஒதுக்கீட்டிலும், 75 இடங்கள் கல்லூரி நிர்வாகமும் நிரப்புகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கலந்தாய்வு முடிந்து கல்லூரியில் சேர்க்கை பெற கடைசி நாளாக செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு இந்த கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற 8 மாணவர்கள், செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி சேர்க்கை பெறவில்லை. இதனால், காலியாக இருந்த இந்த 8 இடங்களை கல்லூரி நிர்வாகமே நிரப்பிவிட்டது. இந்த நிலையில், அரசு ஒதுக்கீட்டுக்கான 8 இடங்களை கல்லூரி நிர்வாகமே எடுத்துக் கொண்டதால், நடப்புக் கல்வியாண்டில் அரசுக்கு கல்லூரி நிர்வாகம் கூடுதலாக 8 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அரசு மருத்துவ மாணவர் தேர்வுக் குழு உத்தரவிட்டது இந்த உத்தரவை எதிர்த்து முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரசு ஒதுக்கீட்டில் வரும் மாணவர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு ஜுலையில் துவங்குகிறது. மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை கடைசி நாள் வரை நடத்துவதால்தான் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கையை குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்னதாக முடித்துவிட வேண்டும். அரசு ஒதுக்கீட்டு மாணவர்கள், அவர்களுக்கு குறிப்பிட்ட கல்லூரியில் சேராவிட்டால், அதுபற்றிய விவரங்களை தேர்வு குழுவுக்கு கல்லூரி நிர்வாகம் தெரிவித்து, அதன்பிறகு முடிவெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
