சிறந்த கல்லூரியாக அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி தேர்வு
சிறந்த கல்லூரியாக அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி தேர்வு
UPDATED : ஆக 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
காரைக்குடி: தமிழகத்தில் சிறந்த பொறியியல் கல்லூரியாக, காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் 300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் 2006-07ம் ஆண்டிற்கான சிறந்தவைகளை தேர்வு செய்ய தமிழக அரசு தொழில்நுட்ப கல்வித்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டது.
தொழில்நுட்ப கல்வித்துறை கமிஷனர் நடத்திய ஆய்விற்கு மாநில அளவில் அனைத்து கல்லூரிகளும் விண்ணப்பித்தன. ஆய்வுக்குழுவினர், கல்லூரிகளில் இருந்துவந்த விண்ணப்பத்தை வைத்து அங்குள்ள கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் கல்வித்திறன், வேலைவாய்ப்பு பெற்று செல்லும் மாணவர்கள் விவரம், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த விதம், கற்பித்தல் மற்றும் கற்கும் முறைகள் குறித்து ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வுபடி தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளில் சிறந்தவையாக காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக்குகளில் வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரியில் சென்னை பிரசிடென்சி கல்லூரி ஆகியவை 2006-07ம் ஆண்டிற்கான சிறந்த கல்லூரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி கமிஷனர் வி.கே.ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இக்கல்லூரிகளின் முதல்வர்களுக்கு செப்., 1 ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி பரிசு வழங்க உள்ளார்.

