தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச வணிகத் துறையில் எம்.பி.ஏ.

சர்வதேச வணிகத் துறையில் எம்.பி.ஏ.

சர்வதேச வணிகத் துறையில் எம்.பி.ஏ.


UPDATED : ஆக 18, 2011 12:00 AM

ADDED : ஆக 18, 2011 01:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2011 12:00 AM ADDED : ஆக 18, 2011 01:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைய நிலையில், இந்திய இளைஞர்களுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மிகுந்துள்ளன. கடந்த 20 வருடங்களாக, உலக வணிகம்(International Business)  பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. விரிவடைந்த சந்தை மற்றும் பலவிதமான தயாரிப்புகள் போன்றவை இன்றைய உலக சந்தையின் அம்சங்களாய் உள்ளன. எனவே சர்வதேச வணிகத்தில் எம்.பி.ஏ. முடித்த பட்டதாரிகளுக்கு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.

மேலும், சர்வதேச அளவில், வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள், நிதிப் பாதுகாப்பு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வணிக ஆலோசனை மையங்கள் போன்றவைகளில் வேலை வாய்ப்புகள் நிறைந்துள்ளன. சர்வதேச வணிகத்தில் எம்.பி.ஏ. முடித்த பட்டதாரிகளுக்கு, ஏற்றுமதி\இறக்குமதி நிறுவனங்களில், முக்கியமாக, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும், சர்வதேச வணிகங்கள் பெரும்பாலும் கடல் மற்றும் வான்வழியே நடப்பதால், சர்வதேச வணிகத்தில் எம்.பி.ஏ. முடித்த பட்டதாரிகள், விமானத்துறை மற்றும் கப்பல் துறைகளில் அபரிமித வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் பொருளாதார மேம்பாட்டு ஏஜென்சிகளிலும் இப்பட்டதாரிகளுக்கான தேவை நிறைய இருக்கிறது. இவைத்தவிர, சுற்றுலா, டிராவல் மற்றும் விருந்தோம்பல் துறைகளிலும் இவர்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. விரும்பியவர்கள், ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி அதன்மூலம் நல்ல வருமானம் பெறலாம்.

சர்வதேச வணிக செயல்பாட்டில், தயாரிப்பு, இன்வாய்சிங், பேக்கிங், இன்சூரன்ஸ், போக்குவரத்து, சரக்கு ஏற்றி இறக்குதல், தரக்கட்டுப்பாடு, ஆய்வு, நிதி, ஆவணப்படுத்தல், சந்தைப்படுத்தல், ஏற்றுமதி, இறக்குமதி, சுங்கத் தீர்வை, சட்ட நடவடிக்கைகள், ஆபத்து மதிப்பீடுகள், சர்வேப் பணி, சேவை, கூட்டு செயல்பாடு, பணப் பரிமாற்ற நிர்வாகம், வரி விதிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற பலவகைப் பணிகள் அடங்கும். இவைத்தவிர, இத்தகையப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மனித வளத்தை நிர்வகிப்பதும், இப்பட்டதாரிகளின் பணி வகைகளில் சேர்கிறது.

கலாச்சார கலப்பு ஆய்வுமுறை, கலாச்சார கலப்பு பேச்சுவார்த்தை மற்றும் தகவல் தொடர்பு, வெளிநாட்டு பரிவர்த்தனை சந்தை மற்றும் அதன் நடவடிக்கைகள் போன்ற பலவித பணிநிலைகள் அவர்களுக்கு உள்ளன. இவைத்தவிர வேறுபல அமைப்பு ரீதியான பணிகளும் உள்ளன. சர்வதேச வணிகத்தின் எல்லையை, இவ்வகைப் பட்டதாரிகள் விஸ்தரிக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட அம்சங்களின்படி, சர்வதேச வணிகத்தில் எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு, ஏற்றுமதி நிறுவனங்கள், சுங்கத் தீர்வை மையங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், துறைமுகங்கள், சரக்கு ஏற்றி இறக்கும் மையங்கள், போக்குவரத்து கழகங்கள், மெரைன் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கப்பல் கம்பெனிகள், வெளிநாட்டு வணிக இயக்குநரகம், ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனை சேவைகள் போன்றவைகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள், கப்பலில் ஏற்றுவதற்கு முன் மற்றும் இறக்கியப் பிறகான தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள், ஏற்றுமதி சந்தை மையங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ள பி.பி.ஓ-க்கள், வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை, சர்வதேச நிதியம், சர்வதேச அக்கவுன்டிங் மற்றும் சர்வதேச நிதி மேலாண்மை போன்ற துறைகளை சார்ந்த நிறுவனங்களில், சர்வதேச வணிகத்தில் எம்.பி.ஏ. படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன.

சர்வதேச வணிகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய சில துறைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. அவை,

* International market research
* International marketing
* Export/Import management
* Merchandising
* Domestic/international logistics
* Shipping
* Export/import documentation

எம்.பி.ஏ. படிப்பானது, வணிக நடவடிக்கையைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை உங்களுக்கு வழங்குகிறது. எம்.பி.ஏ. பட்டதாரிகள், தொழில்முனைவு முயற்சியில் ஈடுபடலாம் அல்லது சிறிது அனுபவம் பெற்ற பிறகு, ஆலோசனை மையங்களை தொடங்கலாம்.

சுருக்கமாக சொல்வதென்றால், எம்.பி.ஏ. படித்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் பணி புரியலாம் மற்றும் தங்களின் தகுதிக்கேற்ப, தமது நிலையை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us