திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் முதுநிலைப் படிப்புகளை தொடங்க கோரிக்கை
திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் முதுநிலைப் படிப்புகளை தொடங்க கோரிக்கை
UPDATED : செப் 02, 2011 12:00 AM
ADDED : செப் 02, 2011 10:18 AM
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் பூபதி கூறியதாவது: "திருவூர் கிராமத்தில், நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையத்தின் பண்ணைகள் உள்ளன. நெல் ஆராய்ச்சி நிலையம் 1942ம் ஆண்டு முதலும், வேளாண் அறிவியல் நிலையம், 2000ம் ஆண்டிலிருந்தும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையத்தின் மூலம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு, அவ்வப்போது வேளாண் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இங்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு, பல புதிய நெல் ரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதில், ஒன்றான டி.கே.எம்.9 என்ற நெல் ரகத்துக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் நினைவு ஸ்தூபி வைக்கப்பட்டுள்ளது.
வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகளுக்கு முதுநிலை பட்டப் படிப்பு, உழவர்களுக்கான இளநிலைப் பட்டப் படிப்பான, இளங்கலை விவசாய தொழில்நுட்பப் படிப்பு மற்றும் மூலிகைப் பயிர் உற்பத்தி தொடர்பான பயிற்சிகளை தொடங்கினால், மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பயன் அடைவர்.
தற்போது, இம்மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், வேளாண் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனில், பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இக்குறையை போக்கும் விதமாக, திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் மேற்கண்ட படிப்புகளை தொடங்க வேண்டும். இது தொடர்பாக, கலெக்டரிடம் எங்கள் சங்கம் சார்பில் மனு அளித்துள்ளோம்,&' என்றார்.
இதுகுறித்து, திருவூர் வேளாண் நிலையத்தின் தலைவர் தேவநாதனிடம் கேட்டபோது, "விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக, வேளாண் பல்கலைக் கழகம் சார்பில், திறந்த வெளிப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பாக, பல்வேறு படிப்புகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது.
தற்போது, தமிழகத்தில் கோவை, திண்டிவனம், திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம் மற்றும் திருச்சி ஆகிய ஆறு இடங்களில் இதற்காக மையங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு, விவசாயிகள் 2 பேர் மட்டுமே, மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். 2 பேருக்காக மட்டும் பயிற்சி மையங்கள் தொடங்க முடியாது. குறைந்தபட்சம் 40 பேர் சேர்ந்தால் பயிற்சி மையம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, கடந்த 2009ம் ஆண்டு, 23 பேருக்கு இந்நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது" என்றார்.
