பள்ளிகளில் ரூ.6,000 கோடி கேம் கார்டர்கள்; மத்திய அரசு திட்டம்
பள்ளிகளில் ரூ.6,000 கோடி கேம் கார்டர்கள்; மத்திய அரசு திட்டம்
UPDATED : செப் 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதற்காக, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் செலவு நிதி கமிட்டி ரூ.6,000 கோடியை ஒதுக்க பரிசீலித்து வருகிறது.
சாலைகளைப் போட்டு அரசிடம் ஒப்படைக்கும் தனியார் நிறுவனங்கள், அந்த சாலை போட செலவழித்த அசல், வட்டியை, குறிப் பிட்ட காலம் வரை சுங்க வரியாக வசூலித்துக் கொள்ளும். அந்த தனியார் - அரசு கூட்டு அடிப்படையில் அரசு பள்ளிகளையும் நவீனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் மின்சாரம், குடிநீர் வசதி இல்லை; மாணவர்கள் செல்ல பாதை இல்லை. பள்ளியில் படிக்க போதிய வசதிகள் இல்லை. கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் இல்லை.
இந்த நிலையை மாற்ற, மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. பல துறைகளில் தனியார் மயம் புகுத்தப்படுவதைப் போல, அரசு பள்ளிகளை கட்டித் தரும் விஷயத்திலும் தனியார் உதவியை நாடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 2012ம் ஆண்டிற்குள் இரண்டு லட்சம் அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர், கேம் கார்டர்கள், எல்.சி.டி., புரொஜக்டர்கள் போன்றவற்றை வாங்கித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு செலவில், மாநில அரசுகள் 25 சதவீதத்தையும், மத்திய அரசு 75 சதவீதத்தையும் பகிர்ந்து கொள்ளும்.
ஐந்தாண்டில் இந்த நவீனமய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு பெறும்.
சர்வ சிக்சா அபியான் பள்ளிகளில் ஏற்கனவே, பல ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டரை இயக்குவது பற்றி சொல்லித் தரப்பட்டுள்ளது. இந்த வகையில், எல்லா அரசு பள்ளிகளிலும் நவீனமயத்தைப் புகுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளை நவீனப்படுத்தும் முயற்சியில், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் உட்பட சில முன்னணி நிறுவனங்கள் உதவியுள்ளன. அத்துடன், அவர்களின் தொழில்நுட்ப உதவிகளையும் அளித்து வருகின்றன.
புதிய திட்டத்தின்படி, கம்ப்யூட்டர் கல்வியை மாணவர்களுக்கு சொல்லித் தரும் வகையில், கம்ப்யூட்டர் தொழில் நுட்ப திறமை வாய்ந்த புதிய ஆசிரியர்களை அதிக சம்பளத்துடன் பணியமர்த்தவும் அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது.

