UPDATED : செப் 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: பிளஸ் 2 வேதியியல் செய்முறைத் தேர்வில் புதிய முறை, வரும் பொதுத் தேர்வில் அமலுக்கு வரும், என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அரசு பள்ளிகளுக்கு கலர் ‘டிவி’ வழங்குதல், புத்தக பூங்கொத்து திட்டத்திற்கான இரண்டாவது தொகுப்பு புத்தகங்கள் வழங்குதல் மற்றும் வட்டார வள மையங்களுக்கு அறிவியல் களஞ்சியம் புத்தகங்கள் வழங்குதல் ஆகியவற்றுக்கான விழா, சென்னையில் நடந்தது.
பள்ளிக் கல்வித் துறை செயலர் குற்றாலிங்கம் தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இணை இயக்குனர் கண்ணப்பன் வரவேற்றார்.
அரசு தொடக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியைகளுக்கு ‘டிவி’களை வழங்கி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
கற்பித்தலை மாணவர்களை எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக 26 கோடி 12 லட்சம் ரூபாய் செலவில், 36 ஆயிரத்து 150 அரசு பள்ளிகளுக்கு கலர் ‘டிவி’க்கள் வழங்கப்படுகின்றன.
மீதமுள்ள பள்ளிகளுக்கு அடுத்தடுத்து ‘டிவி’க்கள் வழங்கப்படும். 6, 7, 8 வகுப்பு மாணவர்களிடையே ஆங்கில பேச்சுப் பயிற்சியை வளர்க்கவும் இந்த ‘டிவி’ பயன்படும். பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து ஒரு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
வேதியியல் பாட செய் முறைத் தேர்வில் இரண்டு உப்புகளுக்கு பதிலாக வெள்ளை உப்பை மட்டும் பயன்படுத்தி செய்முறை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். அந்த கோரிக்கை ஏற்கப்படுகிறது. வரும் பொதுத் தேர்வில் இருந்து வெள்ளை உப்பை மட்டும் பயன்படுத்தி செய்முறைத் தேர்வை செய்கின்ற முறை அமலுக்கு வரும். இதற்கான அரசாணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்கத்தின் கவுரவ ஆலோசகர் விஜயகுமார், செயல்வழி கற்றல் திட்டம் குறித்து விளக்கி பேசினார். பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, தொடக்க கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் தர்ம ராஜேந்திரன் நன்றி கூறினார்.
மாணவர்களுக்கு பலனளிக்கும்: வேதியியல் செய்முறைத் தேர்வு மாற்றம் குறித்த அறிவிப்பு குறித்து, திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளியின் வேதியியல் பாட ஆசிரியர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:
ஏற்கெனவே இருந்த நடைமுறையின்படி இரண்டு உப்புகளை பயன்படுத்தி இரண்டு அமில மூலங்களையும், இரண்டு கார மூலங்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.
நான்கு மூலங்களை கண்டுபிடிக்க வேண்டியிருந்ததால், மாணவர்கள் சிரமப்பட்டனர். மேலும், இந்த செய்முறைத் தேர்வை செய்வதற்கு ஏற்ற உபகரணங்கள் பல பள்ளிகளில் கிடையாது.
தற்போது சாதாரண உப்பை மட்டும் பயன்படுத்தி செய்முறைத் தேர்வை செய்யலாம் என அறிவித்திருப்பது மாணவர்களுக்கு பெரிதும் பலனளிக்கும். இனி ஒரு அமில மூலம், ஒரு கார மூலம் மட்டும் கண்டுபிடித்தால் போதுமானது.
இரண்டு உப்புகளை பயன்படுத்தும் முறை 2006ல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அது கைவிடப்பட்டு, 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்த சாதாரண உப்பு மட்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்தக் கேள்விக்கு ஏற்கனவே 12 மதிப்பெண் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதே மதிப்பெண் தொடர்ந்து வழங்கப்படுமா அல்லது அதில் மாற்றம் வருமா என்பது இனிமேல் தான் தெரியும். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.

