UPDATED : செப் 13, 2011 12:00 AM
ADDED : செப் 13, 2011 11:07 AM
தன் தேவையற்ற கட்டுப்பாடுகளைத் தகர்த்துவிட்டு, நவீனமானதும், நெகிழ்வுத்தன்மை உடையதுமாக மாறி இருக்கிறது; இளம் தலைமுறையினர், தங்கள் பாடத்திட்டத்தை தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் சுதந்திரத்தைத் தந்திருக்கிறது.
இதுவரை பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட பட்டப்படிப்புக்கு, குறிப்பிட்ட பாடத்திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்திருக்கும்; அதைத்தான் பின்பற்ற வேண்டியதிருக்கும். இப்போது நிலைமை அப்படியல்ல. பிரதான பாடத்திட்டத்துடன், மாணவர்களுக்கு விருப்பமான துணைப்பாடங்களையும், இதர பாடங்களையும் சேர்த்துப் பயில முடியும்.
உதாரணத்துக்கு, இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம், பாடவாரியான பதிவுத் திட்டத்தைக் கொணர்ந்திருக்கிறது. இத்திட்டத்தின்படி, மாணவர்கள் தேவையான தாள்களை கூடுதலாக சேர்த்துப் படிக்க முடியும். அவை, எத்தனை தாள்களாக இருப்பினும் சரி. ‘இத்திட்டம், மாணவர்களுக்குத் தேவையான, விருப்பமான பாடங்களை படிக்க வழிகோலுகிறது. கூடுதல் பாடத்திட்டங்களுக்கான ஆன்லைன் தேர்வை, அவர்கள் விரும்பும் சமயங்களில் நடத்துவது பற்றிக்கூட யோசித்து வருகிறோம்’ என்கிறார் ஒரு கல்வியாளர்.
இந்திராகாந்தி திறந்திநிலைப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல வேறுசில பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற நடைமுறைக்கு மாறியிருக்கின்றன. காந்திநகர், பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தில் நான்காண்டு எஸ்.எல்.எஸ்., இளநிலைப்பட்டம் வழங்கப்படுகிறது. இதில், கலை, அறிவியல், வணிகம், நிர்வாகம், நிகழ்த்துக்கலை(Performing Arts) உள்ளிட்ட பாடத்திட்டங்களில் 30க்கும் மேற்பட்ட பாடங்கள் உள்ளன. முதல் இரண்டாண்டுகளுக்கு இவற்றில் எதை வேண்டுமானாலும் எடுத்துப் பயிலலாம். கிராம, நகர்ப்புறங்களில் களப்பயிற்சிக்கும் செல்லலாம்.
வேறு சில பல்கலைக்கழகங்களில், ஏராளமான விருப்ப, மற்றும் அடிப்படைப்பாடத்திட்டங்களில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து படிக்கும் வசதி உள்ளது. இதனால், பிரதான பாடத்திட்டத்துடன் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப வேறுபட்ட களத்திலும் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள முடிகிறது. சில சமயங்களில் மாணவர்கள் இணைப்பாடத்திட்டத்தில் ஈடுபாடு மிகுதியால், அத்துறையிலேயே தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
இருபரிமாண பட்டப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களும் உள்ளன. ஆய்வு நிலைகளில்கூட இதுபோன்ற முறைகளைப் பின்பற்றத் துவங்கி இருக்கின்றனர். அரசியல்அறிவியல் பாடத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடும் ஒருவர், முதலில் பஞ்சாயத்துராஜ் பிரிவை சிறப்புப் பிரிவாகக் கொண்டார். ஆனால், தற்போது அவருக்கு விலங்குகள் மீது அலாதிப்பிரியம் ஏற்பட்டிருப்பதால், பொது நிர்வாகம், சமூகவியல், சூழலியல் என தனது ஆய்வுப்பார்வையை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
மாணவர்களின் தனிப்பட்ட விருப்புரிமைக்கேற்ப பாடத்திட்டங்களை வடிவமைத்துக் கொள்ளும் இம்முறை, மாணவர்களின் பயிலும் ஆர்வத்தையும், அவர்களின் தனித்திறனை வளர்த்துக் கொள்வதற்கும் ஏதுவாகவே இருக்கும்.
