உயர் கல்வித்துறை நிதியில் பயன்படுத்தப்பட்டது 20 சதவீதம் மட்டுமே!
உயர் கல்வித்துறை நிதியில் பயன்படுத்தப்பட்டது 20 சதவீதம் மட்டுமே!
UPDATED : செப் 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இந்நிலையில், 11வது ஐந்தாண்டு திட்டத்தில், உயர்கல்விக்கு 203 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முறையாவது ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தி, உயர்கல்வித் துறையை முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஈடுபடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசால் 2002-07ம் ஆண்டுக்காக பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில், கல்லூரிக் கல்விக்கு ரூ.81 கோடி , பல்கலைக்கழக கல்விக்கு ரூ.33 கோடியே 30 லட்சம், உயர்கல்வி மன்றத்திற்கு ஆறு கோடியே ஐந்து லட்சம் ரூபாய், சட்டக் கல்விக்கு எட்டு கோடியே 42 லட்சம் ரூபாய் என உயர்கல்வித் துறைக்கு ரூ.128 கோடியே 77 லட்சம் ஒதுக்கப்பட்டது.
ஆனால், திட்டநிதியில் கல்லூரிக் கல்விக்கு ஐந்து கோடியே 84 லட்சம் ரூபாய், பல்கலைக்கழக கல்விக்கு மூன்று கோடியே 45 லட்சம் ரூபாய், உயர்கல்வி மன்றத்திற்கு 17 கோடியே 34 லட்சம் ரூபாய், சட்டக் கல்விக்கு ஆறு கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் என, 32 கோடியே 72 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், வெறும் 20.68 சதவீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டிருந்தது.
தற்போது, தமிழக அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்திற்கு 203 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி 97 கோடியே 28 லட்சம் ரூபாய் மட்டுமே. மீதமுள்ள 106 கோடியே இரண்டு லட்சம் ரூபாய், பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப்பட்டு, இன்னும் முடிக்கப்படாமல் உள்ள திட்டங்களுக்கான (தொடரும் திட்டங்கள்) நிதி.
பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் தொடக்கக் கல்விக்கு 1,311 கோடியே 74 லட்சம் ரூபாய், இடைநிலை கல்விக்கு 1,626 கோடியே 70 லட்சம் ரூபாய், உயர்கல்விக்கு 203 கோடியே 30 லட்சம் ரூபாய், தமிழ் வளர்ச்சிக்கு ஏழு கோடியே 26 லட்சம் ரூபாய் என மொத்தம் 3,149 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்விக்கான 11வது ஐந்தாண்டு திட்ட ஒதுக்கீட்டில், உயர்கல்வியின் பங்கு 6.46% மட்டுமே. உயர்கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி சரியாக பயன்படுத்தப்படாததாலேயே, கல்விக்கான ஒதுக்கீட்டில் உயர்கல்வியின் பங்கு மிகவும் குறைந்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக 150வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, செனட் கட்டடம் புதுப்பிக்கப்பட்டபோது, அதை எதிர்த்த மாணவர்கள் கூறிய காரணம், ‘பல்கலைக் கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு போதிய கழிவறை வசதிகள் கூட இல்லாதபோது, இவ்வளவு செலவு செய்து செனட் கட்டடத்தை புதுப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்பதே.
போதிய நிதி வசதிகளுடன் உள்ளதாகக் கருதப்படும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கூட, மாணவர்களுக்குத் தேவையான அளவு விடுதி வசதிகள் இல்லை.
ஒருமைப் பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ள மாநிலக் கல்லூரி, ராணிமேரி கல்லூரி ஆகியவற்றில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததுடன், கட்டடங்களும் மோசமான நிலையில் உள்ளன. சமீபத்தில் நடந்த ஆறு புதிய பொறியியல் கல்லூரிகள் துவக்க விழாவில் பேசிய உயர்கல்வித் துறை செயலர் கணேசன், ‘போதிய வகுப்பறைகள் இல்லாததால், சிறிய மழை பெய்தால் கூட கல்லூரிகளை மூட வேண்டிய நிலை உள்ளது’ என்று குறிப்பிட்டார்.
பல அரசு கல்லூரிகளில், போதிய வகுப்பறைகள் இல்லை, ஆய்வுக் கூடங்கள் இல்லை, நூலகங்கள் இல்லை, ஆசிரியர்கள் இல்லை என ‘இல்லை’ புராணங்கள் தான் அதிகமாக ஒலிக்கின்றன.
உயர்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டிய பணிகள் மலை அளவிற்கு இருக்கும்போது, திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் செலவிடப்படாமல், கருவூலத்தில் தூங்கிக் கொண்டிருந்தால், ‘2020-ம் ஆண்டுக்குள் உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை சதவீதத்தை 11.73 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தும்’ தமிழக உயர்கல்வித் துறையின் இலக்கு, வெறும் கானல் நீராகவே அமையும்.

