கடல் எல்லையைக் காட்டும் கருவி மாணவர்கள் கண்டுபிடிப்பு
கடல் எல்லையைக் காட்டும் கருவி மாணவர்கள் கண்டுபிடிப்பு
UPDATED : செப் 21, 2011 12:00 AM
ADDED : செப் 21, 2011 12:23 PM
இது குறித்து சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் பி.பாபு மனோகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்திய தேசிய பொறியியல் அகாடமி நிறுவனம் பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு விருதுக்கான போட்டியில் 48 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதியில் 9 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அறிவிக்கப்பட்டன. அதில் 3 திட்டங்களை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர்.
பி.இ. எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேசன் இறுதி ஆண்டு படித்த மாணவர் நெல்சன் நவீன், மாணவி பிரின்சி பெர்புத்தா ஆகியோர் இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீனவர்கள் மீன் பிடிக்காமல் இருக்க எச்சரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையை தாண்டுவதற்கு சற்று தூரத்திற்கு முன்பே அலாரம் அடித்து எச்சரிக்கை விடுக்கும். அதுமட்டுமல்லாமல் அதை மீறி படகை செலுத்தினால் படகு அந்த இடத்தில் இருந்து நகராது.
மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிப்பதால் வரும் பிரச்சினைக்கு தீர்வு காண இந்த கருவியை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவிக்கு ஒரு பரிசு கிடைத்துள்ளது.
அடுத்து மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படித்த மாணவர் எஸ். சரவணன் பல பயன்பாட்டுக்கு உதவும் வகையில் ஏ.சி. சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். இதற்கு ஒரு விருது கிடைத்துள்ளது.
3வதாக கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்ட படித்த மாணவி எஸ். மேனகா மிஸ்செல்லா நேவிகேசன் டேட்டா பேஸ் டெக்காடர் என்ற கருவியை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் விமான போக்குவரத்து தொடர்பாக பல நுணுக்கங்களை சில நிமிடங்களில் இந்த சாப்ட்வேர் மூலம் கண்டுபிடிக்கலாம்.
இந்த 3 திட்டங்களுக்குரிய 4 மாணவர்களுக்கும் விருதும் தலா ரூ.10 ஆயிரம் ரூபாயும் இந்திய தேசிய பொறியியல் அகாடமி டிசம்பர் மாதம் நடைபெற உள்ள விழாவில் வழங்குகிறது என்று தெரிவித்தார்.
