தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் எம்.பி.பி.எஸ். வகுப்பு
தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் எம்.பி.பி.எஸ். வகுப்பு
UPDATED : அக் 15, 2011 12:00 AM
ADDED : அக் 15, 2011 02:28 PM
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு முறையால், ஏராளமான எம்.பி.பி.எஸ். மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தனர். இதனை எதிர்த்து மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், மதுரைக் கிளை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவங்கியது. வழக்கின் விசாரணையில், எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களையும் 2ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்திய புதிய தேர்வு முறைக்கு இடைக்காலத் தடை விதித்தும் உயர்நீதிமன்றக் கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. மதுரைக் கிளையின் இடைக்கால உத்தரவிற்குப் பிறகும் கூட, பெரும்பாலான அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், தேர்ச்சி பெற்ற மாணவர்களை மட்டும் 2ம் ஆண்டு வகுப்புகளில் அனுமதித்து, வகுப்புகளை துவக்கியுள்ளன. இந்த நிலையில், இரண்டாம் ஆண்டு வகுப்புகளை துவங்க வேண்டாம் என்றோ அல்லது வேறு எந்த அறிவுறுத்தலோ மருத்துவக் கல்வி இயக்குநரிடமிருந்து வராததாலும், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி 90 சதவீத வகுப்பு பதிவு தேவை என்பதால், தேர்ச்சி பெற்ற மாணவர்களை மட்டும் அனுமதித்து மருத்துவப் படிப்புக்கான 2ம் ஆண்டு வகுப்புகளை துவக்கியுள்ளோம் என்று மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மட்டும், நீதிமன்ற ஆணையை ஏற்று, தோல்வி அடைந்த மாணவர்களையும்ம 2ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, அக்டோபர் 17ம் தேதி துவங்கும் வகுப்புகளில் முதலாம் ஆண்டு படித்த அனைத்து மாணவர்களும் 2ம் ஆண்டு வகுப்பில் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது.
