UPDATED : அக் 17, 2011 12:00 AM
ADDED : அக் 17, 2011 12:14 PM
இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் பட்டப் படிப்புகள் என அனைத்து வகையான படிப்புகளும் வழங்கப்பட்டு வந்தன.
பின்னர்தான் ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனியாக பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு சென்னை பல்கலையில் இருந்து பொறியியல் படிப்பு அண்ணா பல்கலைக்கும், மருத்துவப் படிப்புகள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கும் வழங்கப்பட்டன.
இவ்வாறு படிப்புகள் பிரித்து வழங்குவதற்கு முன்பு அதாவது 2001ம் ஆண்டிற்கு முன்பு வரை சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்து தேர்வெழுதி தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அரியர் தேர்வினை நடத்தி வருகிறது.
கடந்த முறை சென்னை பல்கலையில் நடைபெற்ற அரியர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு, முறைகேடுகள் நடந்துள்ளது உண்மைதான் என்று கூறியுள்ளது.
தேர்வு எழுதிய மாணவர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு தேர்ச்சி மதிப்பெண் போடப்பட்டுள்ளதும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகளவில் வழங்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த முறைகேடுகளுக்கு உதாரணமாக, 38 பாடங்களில் அரியர் வைத்திருந்த ஒரு மாணவர், ஒரே நேரத்தில் அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முறைகேடு குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் கூறுகையில், அரியர் தேர்வுத்தாள் திருத்தும் பணியில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
