UPDATED : அக் 18, 2011 12:00 AM
ADDED : அக் 18, 2011 10:21 AM
டி.என்.பி.எஸ்.சி., பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி, அரசுப் பணிக்கான ஆட்களை தேர்வு செய்கிறது. இதில், குரூப்-1 தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் தான், பதவி உயர்வு மூலம், பின்னாளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாகவும், வேறு துறைகளில் உயர் பதவிகளுக்கும் வருகின்றனர்.
முதல் கட்ட குரூப்-1 தேர்வு, பொது அறிவு தாளாக நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள், எழுத்து மற்றும் நேர்முக தேர்வுகளை சந்திக்க வேண்டும். இந்த தேர்வுகளில், மெரிட்டில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, குறைவாகத் தான் இருக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள், எழுத்துத் தேர்வில் அதிகமான மதிப்பெண்களை பெறுவதில்லை. எனவே, இவர்களுக்கு நேர்முகத் தேர்வில் வழங்கப்படும் 80 மதிப்பெண்கள் முக்கியம். நேர்முகத் தேர்வை, தேர்வாணையத்தில் உள்ள பல்வேறு போர்டுகள் நடத்தும். ஒவ்வொரு உறுப்பினரும், ஒரு போர்டின் தலைவராக இருப்பார். நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் விண்ணப்பதாரருக்கு, எந்த போர்டு, நேர்முகத் தேர்வை நடத்தும் என்பது தெரியாது. ஆனால், பார்க்க வேண்டியவர்களை பார்த்து, கவனித்து விட்டால், நேர்முகத் தேர்வில் முழு மதிப்பெண் பெறலாம் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது : முதலில், உறுப்பினர்கள் அனைவரும், தங்களுக்குள், சிண்டிகேட் அமைத்து, ஒவ்வொருவரும், தங்களுக்கு வேண்டப்பட்ட விண்ணப்பதாரரின் பெயர், பதிவெண் விவரங்களை, மற்ற உறுப்பினர்களிடம் வழங்கி விடுவர். சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் செல்லும் போர்டில் உள்ள தலைவர், இவ்விவரங்களை சரிபார்த்து, அவருக்கு முழுமையான மதிப்பெண்களை அளிக்க ஏற்பாடு செய்து விடுவார். இந்த போர்டின் தலைவருக்கு வேண்டப்பட்ட விண்ணப்பதாரர்கள், வேறு போர்டுக்குச் சென்றால், அங்கும் அதேபோல், முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வுகளில், இதுபோல் தான் முறைகேடுகள் நடக்கின்றன. இவ்வாறு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
