அழகப்பா பல்கலை., வளர்ச்சிகளை மறுமதிப்பீடு செய்ய குழு வருகை
அழகப்பா பல்கலை., வளர்ச்சிகளை மறுமதிப்பீடு செய்ய குழு வருகை
UPDATED : அக் 20, 2011 12:00 AM
ADDED : அக் 20, 2011 10:55 AM
காரைக்குடி : அழகப்பா பல்கலையில் பல்வேறு வளர்ச்சிகளை மறுமதிப்பீடு செய்வதற்காக தேசிய தர நிர்ணய குழு (நாக் கமிட்டி) வந்துள்ளது.
இது குறித்து துணை வேந்தர் சுடலைமுத்து கூறியதாவது, "கடந்த 1985ம் ஆண்டு இப்பல்கலை தோற்றுவிக்கப்பட்டது. சிவகங்கை, ராமநாதபுரத்தில் உள்ள 26 கல்லூரிகள் இப்பல்கலையுடன் இணைப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. கடந்த மே 2005ல் தேசிய தர நிர்ணய குழு இப்பல்கலைக்கு ஏ கிரேடு தரத்தை வழங்கியது.
கற்பித்தல் உத்திகள், விரிவாக்கம், நிர்வாகம் ஆய்வு மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றில் அழகப்பா பல்கலை தனி கவனம் செலுத்தி வருகிறது. உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டதற்காக பல்கலை அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அழகப்பா பல்கலைக்கு ரூ.6 கோடி மானியமாக வழங்கியது.
22 துறைகள், இரண்டு உறுப்பு கல்லூரிகள் வாயிலாக கலை, கல்வி, அறிவியல் மற்றும் மேலாண்மை பிரிவுகளில் பட்டமேற்படிப்பு, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டப்படிப்பு வழங்கப்பட்டு வருகின்றன.
வரும் கல்வியாண்டில் ஆற்றல் அறிவியல் துறை உருவாக்கப்படவுள்ளது. செட்டிநாடு பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்தும் வண்ணம், சுற்றுலா சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள் துவங்கப்படவுள்ளது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு, பல்கலையில் ஏற்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிகளை மறுமதிப்பீடு செய்வதற்காக தேசிய தர நிர்ணய குழு அக்., 17 முதல் 20ம் தேதி வரை வருகை தரவுள்ளது" என்றார்.
