தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கதை சொல்லுதலும் குழந்தை வளர்ப்பும்!

கதை சொல்லுதலும் குழந்தை வளர்ப்பும்!

கதை சொல்லுதலும் குழந்தை வளர்ப்பும்!


UPDATED : அக் 22, 2011 12:00 AM

ADDED : அக் 23, 2011 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2011 12:00 AM ADDED : அக் 23, 2011 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு குழந்தையின் மனவளர்ச்சியானது, 6 வயது வரை மிக விரைவாக நடைபெறும் என்று குழந்தை உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். 6 வயதுவரை, அந்த மனவளர்ச்சி பந்தயக் குதிரையின் வேகத்தில் இருக்கும் எனவும், அதன்பிறகு அது ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்து நிலையான மற்றும் நீடித்த வேகத்தில் செல்கிறது.

கல்வி நிலைய முறையிலான அறிதல் ஒரு குழந்தைக்கு அறிமுகமாகும் முன்னதாக, அந்தக் குழந்தைக்கு வீடுதான் பள்ளிக்கூடம். பல காலங்களாக கதை சொல்வதின் மூலமாகத்தான் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்தக் கதை சொல்லும் முறையானது யுகயுகமாக நீடித்து மற்றும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ஒரு குழந்தைக்கு அதன் ஆரம்ப பரிணாம கட்டத்தில், பார்க்கும் ஒவ்வொன்றும் அதிசயமாகவே தெரியும். பெரியவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் தான் செய்துப் பார்க்க விரும்பும். மனமும், அறிவும் வடிவம் பெறும் ஒரு பருவம் அது. இந்த இடத்தில்தான் கதைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. உலகை எளிய மற்றும் சுவாரஸ்யமான முறையில் அறிமுகப்படுத்தலில் பயன்படும் ஒரு அற்புதக் கருவி கதை.

நல்ல கதை அவசியம்

குழந்தைகளுக்கு கதை சொல்பவர் நினைவில் வைக்க வேண்டிய முக்கிய விஷயம், நல்ல கதையா? என்பதுதான். ஒரு கதை அழகியல் நிறைந்ததாகவும், இயற்கையின் அதிசயத்தைப் பேசுவதாகவும், மிருகங்களின் உலகைப் பேசுவதாகவும், மனிதாபிமானத்தைக் கற்றுத் தருவதாகவும், அறிவியலை விளக்குவதாகவும், பகுத்தறிவைத் தூண்டுவதாகவும், அமைதியை போதிப்பதாகவும், நற்பண்புகளை வலியுறுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

கதையின் போக்கு

கதையைக் கேட்கும் சிறு குழந்தைகள் பெரியவர்களைவிட, மிக அதிகமாக அதனோடு ஒன்றி விடுகிறார்கள். பெரியவர்கள் போல் புற தொந்தரவுகளால் கவனத்தை சிதற விடுவதில்லை. கதையின் முடிவு நெருங்கும்போது குழந்தைகள் அதிக ஆர்வமாகி விடுகிறார்கள். முடிவு எப்படி இருக்கும் என்று அவர்களிடம் கேள்வி கேட்டாலும், அவர்கள் ஒரு பதிலை சொல்வார்கள். கதையில் நாம் தவறாக பெயரை மாற்றி சொன்னாலும், அதை சரிசெய்வார்கள். கதையின் அடுத்தக் கட்டத்தில் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கும் அவர்களிடம் பதில் கிடைக்கும். மொத்தத்தில், அவர்களின் சிந்தனை மற்றும் கற்பனைத் திறனை கதைகள் வார்த்தெடுக்கின்றன.

கதை சொல்லும் திறன்

ஒரு திரைப்படத்தை நாம் காணும்போது, அதனுடைய படக் காட்சிகளின்பால் ஒன்றி விடுகிறோம். அதுபோல்தான் கதையும். கதை சொல்லும்போது, கதாபாத்திரங்களை விவரித்தல்(அவன் அப்படி இருப்பான், அந்தளவு திறமைசாலி, பயங்கரமானவன் என்பது போன்ற), இயற்கை காட்சிகளை விவரித்தல், சம்பவங்களின் தன்மைகளை விவரித்தல்(கதாபாத்திரங்கள் செய்யும் செயல்) போன்ற பலவித அம்சங்கள் எப்படி விவரிக்கப்படுகிறதோ, அந்தளவிற்கே அந்தக் கதையின் சுவாரஸ்யம் அமைகிறது மற்றும் ஒரு குழந்தையின் கவனத்தை ஈர்க்கிறது.

இத்தகைய வர்ணனை மற்றும் விவரிப்புகளைக் கேட்கும் ஒரு குழந்தை அந்த அம்சங்களை தனது மனதிற்குள் கற்பனை செய்து பார்க்கிறது. அந்தக் காட்சிகளை மாற்றியும் யோசிக்கிறது. நடைமுறை வாழ்வின் அம்சங்களில் கற்பனையை கலந்து ரசிக்கிறது. இதன்மூலம் குழந்தைக்குள் ஒரு படைப்பாளி உருவாகிறான். எனவே, இந்த விஷயத்தில், குழந்தைக்கு கதை சொல்லும் நபர்களின் திறமையும் அடங்கியுள்ளது.

இதைத்தவிர, மிருகங்களைப் பற்றியோ அல்லது பறவைகளைப் பற்றியோ விவரிக்கும்போது, அவைகளின் குரல் ஒலியை நம்மால் முடிந்த அளவு வெளிப்படுத்தினால் நன்று. மேலும், அத்தகைய மிருகங்களுக்கான அசைவுகளையும் வெளிப்படுத்த வேண்டும். மேலும், வாகனங்களைப் பற்றி கூறும்போது, அவற்றின் ஒலிகள் மற்றும் அதன் பயணங்கள் ஆகியவைப் பற்றி மிமிக்ரி மற்றும் உடலசைவுகளை கொண்டு வரலாம். இதன்மூலம் அந்த கதையின் உயிரோட்டம் கூட்டப்பட்டு, அதன்மூலம் குழந்தையின் கற்பனை மற்றும் ஆர்வம் அதிகரிக்கும்.

கதையின் தன்மை

பொதுவாக, கற்பனையான அல்லது மிருகங்கள் பேசுவது போன்ற கதைகளே, முதியவர்களால், குழந்தைகளுக்கு அதிகம் சொல்லப்படுகின்றன. இதனால் குழந்தையின் கற்பனைத் திறன் மட்டுமே வளரும். ஆனால் பல சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், சிறந்த குழந்தை நாவல்கள் போன்றவைகளை கதையாக சொல்லும்போது, குழந்தைகளின் சமூகப் பார்வை மேம்படுகிறது. ஒரு அம்சத்தை அற்புதமாக விளக்கும்போது, அதைக் கேட்பவருக்கு அந்த அம்சம் நிச்சயம் பிடித்துவிடும். மேலும், குழந்தைகளுக்கு கதை சொல்பவர், குழந்தைகளின் உலகிற்குள் நுழைந்துவிட வேண்டும். அப்போதுதான் கதையானது குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும். இல்லையெனில், அவர்களின் புரிதல் திறனை மீறி கதை சென்றுவிடும்.

சில குழந்தைகளுக்கு சில குறிப்பிட்ட வகையான கதைகள் பிடித்துவிடும். அதுபோன்ற கதைகளை திரும்ப திரும்ப சொல்லுமாறு குழந்தைகள் வற்புறுத்துவர். அந்த சமயத்தில், அதுபோன்ற கதைகளில் சில புதிய அம்சங்களை சேர்த்துக் கொண்டு மீண்டும் மீண்டும் கூறலாம். ஒரு புத்தகத்தில் உள்ளதையோ அல்லது தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்தில் பார்த்ததையோ அப்படியே சொல்ல வேண்டிய அவசியமில்லை.

சூழலுக்கு ஏற்ப சில நல்ல கருத்துக்களை சேர்த்து, வெளிநாட்டு கதையாக இருந்தால் நம்மூர் கதையாக மாற்றி, வெளிமாநில கலாச்சார கதையாக இருந்தால் நம் கலாச்சார அம்சங்களை அதில் மாற்றி சேர்த்து கூறலாம். ஆனால் அதேசமயம், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இதுபோன்ற கலாச்சாரம் மற்றும் மக்கள் வாழ்கிறார்கள் என்பதும் கதைகளின் மூலம் குழந்தைகளுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.

குணாதிசயங்களைப் புரிந்துகொள்ளல்

கதைகளின் மூலமாக, குழந்தைகளுக்கு பலவிதமான நபர்கள் மற்றும் விலங்குகள், பறவைகளின் குண நலன்கள் மற்றும் தன்மைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் குழந்தைகளுக்கு இதர மனிதர்கள் மற்றும் உயிரினங்களைப் பற்றி தெரிய வருகிறது. ஒரு மானின் தன்மைப் பற்றியும், ஒரு புலியின் தன்மைப் பற்றியும் அறிந்து கொள்கிறது குழந்தை. ஒரு கழுகின் தன்மைப் பற்றியும், சிட்டுக் குருவியின் தன்மைப் பற்றியும் அறிந்து கொள்கிறது குழந்தை.

மனிதர்களை எடுத்துக்கொண்டால், தன் வயதையொத்த குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் குறித்த ஒரு பொதுவான கருத்தாக்கத்தை குழந்தை அறிந்துகொள்கிறது. மேலும், நல்லவர்கள் எதுபோன்ற செயல்களை செய்வார்கள், தீயவர்கள் எதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பது குறித்து ஒரு புரிதல் குழந்தைக்கு ஏற்படுகிறது. எனவே, கதையில் வரும் கதாப்பாத்திர அம்சங்கள் குறித்து கதை சொல்பவர் கவனம் செலுத்த வேண்டும்.

லட்சியத்தை கதையில் கலத்தல்

உங்கள் குழந்தை என்னவாக வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் இருக்கும். சில சமயங்களில் அது இருவருக்கும் முரண்படலாம். ஆனால் குழந்தையின் விருப்பம்தான் இதில் முக்கியமானது. உதாரணமாக, உங்களின் குழந்தை ஒரு விஞ்ஞானியாக எதிர்காலத்தில் ஆக விரும்பினால், ஐன்ஸ்டீன், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை கதைகளாக கூறுங்கள். பெரிய விளையாட்டு வீரனாக ஆக விரும்பினால், பிரபல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை கதைகளாகக் கூறுங்கள்.

பின்னாளில், இதுபோன்ற பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் மற்றும் அவர்கள் எழுதிய புத்தகங்கள் போன்றவற்றைப் படிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படும். இதன் மூலம் அவர்களின் லட்சியமானது, அவர்களின் மனதில் நன்கு அழுத்தப்படும். அதை அடையும் விதத்தை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். தங்களின் விருப்பம் சாத்தியமான ஒன்றுதான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். எனவே, கதைகள் குழந்தைகளின் லட்சியத்திற்கு வலு சேர்க்கின்றன.

அழுத்தம் கொடுத்தல்

கதை சொல்கையில், அதில் வரும் முக்கியமான அம்சங்களுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். உதாரணமாக, கதை நாயகன் வெங்கட், ஒரு நாளைக்கு குறைந்தது 3 மணிநேரம் படிப்பான். அதனால்தான் அவன் முதல் மதிப்பெண் பெற்றான் என்பது முக்கிய அம்சமாக இருந்தால், அதற்கு அழுத்தம் கொடுத்துக் கூற வேண்டும். சிலமுறை திரும்ப திரும்பவும் கூறலாம். குழந்தையிடம், முதல் மதிப்பெண்ணை வெங்கட் எப்படி வாங்கினான்? என்று கேள்வியும் கேட்கலாம். இதன்மூலம் உங்களின் குழந்தையானது, படிப்பதற்கு நிறைய நேரம் ஒதுக்கினால், முதல் மதிப்பெண் பெற முடியும் என்பதை நடைமுறை ரீதியாக புரிந்துகொள்ளும். இதுபோலத்தான், நடைமுறையில் உங்கள் குழந்தையை வெற்றிகரமான நபராக்க, கதைகளில் அந்த அம்சங்களை சேர்த்து அவர்களின் மனதை தயார்படுத்தலாம்.

வெற்றிகரமான குழந்தை வளர்ப்பு செயல்பாட்டில், "கதைகளும் முக்கிய அம்சங்கள்" என்பது இப்போது நமக்குப் புரிந்திருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us