குறுகிய கால பணி நியமனங்களில் ஆர்வம் செலுத்தும் நிறுவனங்கள்
குறுகிய கால பணி நியமனங்களில் ஆர்வம் செலுத்தும் நிறுவனங்கள்
UPDATED : நவ 02, 2011 12:00 AM
ADDED : நவ 02, 2011 10:27 AM
இந்தியப் பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையின் காரணமாக இந்தியாவில் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை நிரந்தரமாகப் பணி நியமனம் செய்வதைத் தவிர்த்து தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதையே பெரிதும் விரும்புவதாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தியன் ஸ்டாபிங் பெடரேஷன் எனப்படும் ஐ.எஸ்.எப்., அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் மற்றும் சியட் என்ற அமைப்புகள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. மொத்தமுள்ள நிறுவனங்களில் நான்கில் 3 பங்கு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தற்காலிக அடிப்படையிலேயே பணி நியமனங்களைச் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவிலுள்ள மொத்த ஊழியர்களில் 20 சதவிகிதத்தினர் மட்டுமே முறைசார்ந்த பணிகளில் உள்ளனர். மீதமுள்ள 80 சதவிகிதத்தினர் முறை சாராத பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்தியாவைப் பொறுத்த வரை தற்காலிக பணி இடங்களுக்கே மிகவும் பலம் உள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் முறையான தற்காலிகப் பணிகளை உருவாக்குவதன் மூலம் வேலையில்லாதோர் விகிதத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என்று இந்த அமைப்பு கருதுகிறது. ஊழியரின் நிலையிலிருந்து பார்த்தால், தெளிவான பணி, பாதுகாப்பான பணிச் சூழல், நிச்சயமான ஊதியம் என்ற நன்மைகள் இதன் மூலம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த அமைப்பு கூறுகிறது.
உலகமயமாக்கல், வியாபார ஒருங்கிணைப்பு என்ற காரணங்களால் வேலையின்மை விகிதம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கும் இந்த நாட்களில் தற்காலிகப் பணி வாய்ப்புகள்தான் இதற்கு சிறந்த மாற்றாக இருக்க முடியும் என்றும் ஐ.எஸ்.எப்., அமைப்பின் சார்பாக கருத்து வெளியாகியுள்ளது.
