திருவள்ளுவர் அரசு கல்லூரியில் பேரிடர் மேலாண் படை துவக்கம்
திருவள்ளுவர் அரசு கல்லூரியில் பேரிடர் மேலாண் படை துவக்கம்
UPDATED : நவ 09, 2011 12:00 AM
ADDED : நவ 09, 2011 11:18 AM
ராசிபுரம்: நாமக்கல் மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், ஒரு நாள் ஆற்றுப்படுத்துதல் மற்றும் பேரிடர் மேலாண் படை துவக்க விழா, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் நீலயாதாட்சி வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், கவுரவ செயலாளர் ராஜேஸ், திட்ட அலுவலர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் செஞ்சிலுவை சங்க மாநில ஆலோசகர் காதர் பாஷா பங்கேற்று பேசியதாவது: இயற்கையினால் ஏற்படக்கூடிய பேரிடரினால் பாதிப்புக்கு உட்பட்ட மக்களுக்கு வேண்டிய மனித நேய பணிகளையும், அடிப்படை தேவைகளையும், சுகாதார மேம்பாடுகளை அளித்து, அவர்கள் மீண்டும் தங்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் வரை, உதவிகள் புரிய வேண்டும்.
பேரிடர் காலத்தில், தன் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான உடை, உணவு, பொருள்கள் ஆகியவற்றை, 300 குடும்பத்துக்கு வழங்கும் வகையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தை சமாளிப்பதற்கான பயிற்சியை, டில்லி செஞ்சிலுவை சங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதனுக்கு வழங்கியுள்ளது.
தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தில் தான் முதன் முறையில், பேரிடர் மேலாண் படை உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார். சுகாதார நல ஆய்வாளர் ஜெகநாதன், பயிற்சியில் பங்கு பெற்ற உறுப்பினர்களுக்கு உடல் நலம், சுகாதார மேம்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல், பாராமெடிக்கல் மற்றும் நர்ஸிங் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் இளைஞர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் சான்றிதழ் வழங்கினார்.
