UPDATED : நவ 15, 2011 12:00 AM
ADDED : நவ 15, 2011 09:52 AM
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை சுமுகமாகவும், எவ்வித பிரச்னையும் இன்றி நடத்துவதற்கு ஏதுவாக, தேர்வுத் துறையின் கோரிக்கையை ஏற்று, இத்துறையில் காலியாக உள்ள 150 பணியிடங்களை, தமிழக அரசு விரைவில் நிரப்ப உள்ளது.
இதுகுறித்து, தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: துறைக்கு ஒதுக்கப்பட்ட 800 பணியிடங்களில், 200 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றில், உதவியாளர் பணியிடங்கள் மிகவும் முக்கியமானது. கோப்புகளை தயாரிப்பது, அவற்றை பராமரிப்பது உள்ளிட்ட, பல்வேறு முக்கிய பணிகளை இவர்கள் தான் கையாளுகின்றனர். இதில், மொத்தம் உள்ள 186 பணியிடங்களில், 127 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இப்படி, பல நிலைகளிலும், காலியிடங்கள் அதிகம் உள்ளன.
தற்காலிக அடிப்படையில், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், 150 பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேட்ட போது, "தேர்வுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விவகாரம், அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மிக விரைவில், காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப, கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வித பிரச்னையும் இன்றி, தேர்வை சுமுகமாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தமிழக அரசு எடுக்கும்" என்றார்.
