UPDATED : நவ 16, 2011 12:00 AM
ADDED : நவ 16, 2011 11:48 AM
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில் மட்டும், ஆண்டுதோறும் சராசரியாக, 2% மாணவர்கள் தோல்வி அடைவதாக, தமிழ் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், முதன்முறையாக, வரும் மார்ச், ஏப்ரலில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. வழக்கமாக, புதிய பாடத்திட்டம் அமல்படுத்தும்போது, ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்படும். ஆனால், சமச்சீர் கல்வி வழக்கு பிரச்னை, இது முடிந்ததும் பாடப் புத்தகம் வினியோகித்தலில் பிரச்னை, அதன்பின், உள்ளாட்சித் தேர்தல்கள், காலாண்டுத் தேர்வு என தொடர்ந்ததால், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவில்லை.
ஆசிரியர்களே, நேரடியாகப் பாடம் கற்பித்து வருகின்றனர். ஆசிரியர்களுக்கு முழுமையான அளவில் பயிற்சி அளிக்காதபோதும், கடினமான பாடப் பகுதிகளை, மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டு தேர்வெழுதுவதற்காக, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, 20 மையங்களில், 15 ம் தேதி பயிற்சி துவங்கியது. 19ம் தேதி வரை, பயிற்சிகள் நடக்கின்றன.
தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் பாடத்திற்கான பயிற்சி வகுப்புகள் நடந்தன. இதில், தென் சென்னை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட, 130 பள்ளிகளில் இருந்து, 150 தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அனுபவம் வாய்ந்த மூத்த தமிழ் ஆசிரியர்களான சேகர் (கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி), கோமதி (ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி), ரவிக்குமார் (சிந்தாதிரிப்பேட்டை மேல்நிலைப் பள்ளி), ராஜா (ஜெனரல் கரியப்பா மேல்நிலைப் பள்ளி) ஆகியோர், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். தென் சென்னை மாவட்டக் கல்வி அலுவலர் புகழேந்தி மேற்பார்வையில், பயிற்சி வகுப்புகள் நடந்தன.
ஒற்றுப் பிழையால்தான் மதிப்பெண் குறைகிறது
பயிற்சி குறித்து, ஆசிரியர் சேகர் உள்ளிட்டோர் கூறியதாவது: செய்யுள், இலக்கியம் போன்றவற்றை, மாணவர்களுக்குப் புரியும் வகையில், விரிவாக எடுத்துக் கூறினால்தான், அவர்களால் புரிந்து கொள்ள முடியும். பழைய பாடத்திட்டத்தில், நேரடியாகப் பதில் அளிக்கும் வகையில்தான் கேள்விகள் இருக்கும். புதிய பாடத்திட்டம், மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும் வகையில் அமைந்துள்ளது. இதையெல்லாம் ஆசிரியர்களுக்கு விளக்கிக் கூறுவோம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் வழங்குவது, தற்போது அதிகரித்து வருகிறது.
மாணவர்கள், அதிகளவில் ஒற்றுப் பிழைகளைச் செய்வதால்தான், அவர்களால் தமிழ் பாடத்தில், சென்டம் வாங்க முடியாமல் போகிறது. தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களில், 2 சதவீதம் பேர், தமிழ் பாடத்தில் தோல்வி அடைகின்றனர். கடந்த ஆண்டு, சென்னையில் மட்டும் 1,300 பேர், தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்தனர். இதை குறைக்கும் வகையில்தான், இந்த பயிற்சிகள் நடக்கின்றன.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
