விண்ணப்பித்த மூன்று நாளில் பாஸ்போர்ட் வழங்க புதிய திட்டம்
விண்ணப்பித்த மூன்று நாளில் பாஸ்போர்ட் வழங்க புதிய திட்டம்
UPDATED : செப் 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின், விண்ணப்பித்த மூன்று நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்,” என, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
கோவை பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பு விழா, கோவை ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பேசுகையில், “கோவை மாவட்டத்தில், 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 42.7 லட்சம் பேர் இருநதனர்.
இந்த எண்ணிக்கை வரும் 2010ம் ஆண்டில் 53 லட்சத்தை தொடும்; 2025ம் ஆண்டில் 68 லட்சமாக உயரும். கோவை மிக வேகமாக வளரும் மாவட்டம். இங்கு பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது சரியான தருணம்,” என்றார்.
கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை திறந்து வைத்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
கோவையில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகம், கோவை மக்களின் விருப்பத்தை மட்டுமல்ல; மேலும், நான்கு மாவட்ட மக்களின் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றும். இந்த அலுவலகத்தில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், திருச்சி மற்றும் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் ஆறு லட்சம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏழு லட்சம் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு, துவக்கத்தில் இருந்து, ஆகஸ்ட் வரை 40 ஆயிரம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு, இந்தியாவில், 22 லட்சம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்தது. இந்த ஆண்டு இறுதியில் பாஸ்போர்ட் பெறுவோரின் எண்ணிக்கை 58 லட்சமாக உயரும். வரும் 2010ல், 80 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நாட்டிலுள்ள 37 பாஸ்போர்ட் அலுவலகங்கள் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. சில அலுவலங்களில் மட்டும் எலக்ட்ரானிக் டோக்கன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதே முறை, கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், ‘பாஸ்போர்ட் சேவா திட்டம்’ 2009ம் ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வரும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபின், விண்ணப்பித்த மூன்று நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். போலீஸ் விசாரணை தேவைப்படும் விண்ணப்பங்களுக்கு, விசாரணை முடிந்த மூன்று நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும். தட்கல் முறையில் விண்ணப்பிப்போருக்கு அன்றைய தினமே பாஸ்போர்ட் கிடைக்கும்.
தற்போது நாடு முழுவதும் 68 பாஸ்போர்ட் வசதி மையம் ஏற்படுத்த கருத்துரு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பம் சரிபார்க்கப்படும். இந்த மையத்தின் உதவியுடன் எலக்ட்ரானிக் தொடர்பு வழியே போலீஸ் விசாரணை துரிதப்படுத்தப்படும். இந்தியாவில், ‘இ பாஸ்போர்ட்’ முறையில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இம்முறையில் முதல் கட்டமாக ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
‘இ பாஸ்போர்ட்’ முறை, மக்களின் பயன்பாட்டுக்கு 2009 செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரும். இந்த பாஸ்போர்ட் போல, போலி பாஸ்போர்ட் தயாரிக்க முடியாது. இவ்வாறு, அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார்.
விழாவில், மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் இளங்கோவன், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் வாசன், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணையமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பழனிச்சாமி, கோவை கலெக்டர் பழனிக்குமார், மேயர் வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.
