UPDATED : செப் 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அனைவருக்கும் கல்வியறிவு என்னும் உயரிய நோக்கத்தோடு மத்திய அரசால் துவங்கப்பட்ட சர்வ சிக் ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டம் வெற்றிப் பாதையில் பயணிப்பதை சமீபத்திய கல்வித் துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
2001ம் ஆண்டில் துவங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் இதுவரை 3.5 கோடி குழந்தைகள் கல்வி முறைக்குள் நுழைந்திருப்பதாக மத்திய கல்விச் செயலர் தெரிவித்துள்ளார்.
பாதியில் படிப்பை நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை 2001-02ம் ஆண்டில் 3.2 கோடியாக இருந்தது. இது தற்போது 45 லட்சமாகக் குறைந்துள்ளது. 2010ம் ஆண்டில் நூறு சத படிப்பறிவை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இத்திட்டம் இந்தியாவில் தரப்படும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2004-05ம் ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு சுமார் 3 ஆயிரம் கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.13 ஆயிரத்து 100 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை வாழ்வதற்கான உரிமை என்பதில் கல்வி உரிமையும் அடங்கியிருப்பதாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேந்திர பாபு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 14 வயது வரைக்கும் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி தரப்பட வேண்டும் என்பதே வாழ்வதற்கான உரிமையில் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
