UPDATED : செப் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஓ.எம்.ஆர்., விடைத்தாளில், சரியான விடைக்குரிய கட்டத்தை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய நடைமுறை, 21ம் தேதி, நடைபெறும் தேர்வில் அமல்படுத்தப்படும்’ என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குவதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. ஊரகப்பகுதி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு போட்டித் தேர்வுகளை நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள், முந்தைய ஏழாம் வகுப்பு பொதுத் தேர்வில், முக்கிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், அவர்களுடைய பெற்றோர் ஆண்டு வருவாயின் அடிப்படையிலும் இந்த தேர்வில் பங்கேற்கலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் 50 மாணவர்கள், 50 மாணவிகள் என ஒரு மாவட்டத்திற்கு 100 பேர் வீதம் தேர்வு செய்யப்படுவர். இந்த மாணவ, மாணவிகளுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நான்கு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றன.
நடப்பு ஆண்டிற்கான தேர்வு, 21ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. கொள்குறிவகை முறையில் (அப்ஜக்டிவ் டைப்) ஒரு கேள்விக்கு தரப்படும் நான்கு விடைகளில் சரியான விடையைத் தேர்வு செய்து, அதை வெள்ளைத் தாளில் எழுதும் முறை ஏற்கனவே இருந்தது.
புதிய முறையின்படி ஓ.எம்.ஆர்., விடைத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு கட்டங்கள் அதில் தரப்பட்டிருக்கும். அதில் சரியான விடைக்குரிய கட்டத்தை முழுவதுமாக ‘ஷேடு’ செய்ய வேண்டும். இந்த ஆண்டு தேர்வில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்வதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
