UPDATED : செப் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: பாரதியார் பல்கலையில், அடுத்த கல்வியாண்டில் நான்காண்டு பி.எஸ்சி., படிப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமின்றி, சேவைத்துறை, உற்பத்தி துறை, சுற்றுலா, போக்குவரத்து, காப்பீடு, வங்கி, விருந்தோம்பல் மற்றும் விடுதி மேலாண்மை உள்ளிட்ட துறைகளிலும் வேலைவாய்ப்புகள் ஏராளமாகவுள்ளன. ஆனால், கலை அறிவியல் கல்லூரி மற்றும் இன்ஜினிரியங் கல்லூரிகள், மாணவர்களை தகவல் தொழில்நுட்ப துறைக்கு ஏற்பவே தயார்படுத்துகின்றன.
இன்றைய சூழலில், கல்லூரிகளில் வளாகத்தேர்வு நடத்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருவதில்லை. ஏற்கனவே வேலைக்கு தேர்வு செய்த மாணவர்களை, ரூ.15 ஆயிரம் சம்பளத்துக்கு வர முடியுமா என பல நிறுவனங்கள் கேட்டுவருகின்றன. தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி சரிந்து வரும் நிலையில், மற்ற துறைகளில் உள்ள வேலைவாய்ப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
இதைக்கருத்தில் கொண்டு, பாரதியார் பல்கலையில் அடுத்த கல்வியாண்டில் நான்கு ஆண்டு பி.எஸ்சி., படிப்பு துவக்கப்படவுள்ளது. இந்த படிப்புக்கான பாடத்திட்டம், அடிப்படை அறிவியல், உயிர் அறிவியல், சமூக அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைக் கொண்டிருக்கும்.
இன்ஜினியரிங் படிப்பில் ‘சாண்ட்விச்’ என்ற படிப்பு உள்ளது. இந்த பாடத்திட்டத்தில் சிவில், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் என எல்லாப்பாடங்களும் இடம்பெற்றிருக்கும். அதுபோல், நான்கு ஆண்டு பி.எஸ்சி., படிப்பு, பல்வேறு பாடங்களைக் கொண்டுள்ள ஒருங்கிணைந்த படிப்பாக அறிமுகப்படுத்தப்படும். இந்த படிப்பை அடுத்த ஆண்டு கல்லூரிகளும் அறிமுகப்படுத்தும்.
இந்தியாவில் இளநிலை பட்டப்படிப்புகள் மூன்று ஆண்டுகளும், முதுநிலை பட்டப்படிப்பு இரு ஆண்டுகளும் நடத்தப்படுகின்றன. ஆனால், வெளிநாடுகளில் இளநிலை பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகள்; முதுநிலை பட்டப்படிப்பு ஓராண்டு மட்டுமே நடத்தப்படுகின்றன.
பாரதியார் பல்கலையில் நான்கு ஆண்டு படிப்பு அறிமுகப்படுத்துவதால், வெளிநாடுகளில் நேரடியாக முதுநிலை பட்டப்படிப்பில் சேர முடியும். இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.
