கல்லூரி மாணவர்களுக்கு ‘விப்ரோ’ நிறுவனத்தின் பயிற்சி
கல்லூரி மாணவர்களுக்கு ‘விப்ரோ’ நிறுவனத்தின் பயிற்சி
UPDATED : செப் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: பாரதியார் பல்கலையில், கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றி ‘விப்ரோ’ நிறுவனம், வரும் 18ம் தேதி பயிற்சி அளிக்கிறது.
பெங்களூரூவில் உள்ள விப்ரோ நிறுவனம், ‘வேஸ்’ (விப்ரோ அகாடமி ஆப் சாப்ட்வேர் எக்செலன்ஸ்) என்ற அகாடமியை துவக்கியுள்ளது. இந்த அகாடமி, கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும். பின், கல்லூரிகளுக்கு நேரில் சென்று, தகுதியான மாணவ, மாணவியரை வேலைக்கு தேர்வு செய்யும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ,மாணவியர், பிலானியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எம்.எஸ்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இப்படிப்பு முடிந்தபின், விப்ரோ நிறுவனத்தில் மாணவர்கள் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
தற்போது கோவை பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், மின்னணுவியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றி பயிற்சி அளிக்க ‘வேஸ்’ அகாடமி முடிவு செய்துள்ளது.
இப்பயிற்சி, கோவை பாரதியார் பல்கலையில் உள்ள நாச்சிமுத்து அரங்கில் வரும் 18ம் தேதி நடக்கும். அன்று மதியத்துக்கு மேல், பாரதியார் பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சி முடிந்த இரு வாரங்களுக்குப்பின், தகுதியான மாணவ, மாணவியருக்கு எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். பின், இவர்கள் இளநிலை பட்டப்படிப்பை முடித்தபின், எம்.எஸ்., படிக்கும் வாய்ப்பை பெறுவர்.
