வகுப்புக்கு வரத்தவறினாலும் கல்வி கற்க வேளாண் பல்கலையில் வாய்ப்பு
வகுப்புக்கு வரத்தவறினாலும் கல்வி கற்க வேளாண் பல்கலையில் வாய்ப்பு
UPDATED : செப் 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இதற்கான வாய்ப்பை அளித்துள்ளது கோவை வேளாண் பல்கலைக்கழகம்.
உலக வங்கி நிதியுதவியுடன், 1.2 கோடி ரூபாய் மதிப்பில், ‘தேசிய வேளாண்மை புதிய கண்டுபிடிப்பு திட்டத்தை’ கடந்த ஆண்டு முதல் கோவை வேளாண் பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வேளாண் பல்கலையில் ‘இ - லேப்’ அமைக்கப்பட்டுள்ளது.
வகுப்பறையில், விரிவுரையாளர்கள் பாடம் நடத்தும்போது, வீடியோ எடுத்து, அதை ‘எடிட்’ செய்யும் வேலை ‘இ-லேப்’ ஊழியர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலையில் அனைத்து மாணவ, மாணவியர், தற்போது அமைக்கப்பட்டுள்ள நவீன வகுப்பறையில், ‘லேப் டாப்’ சகிதம் அமர்ந்திருப்பர். அந்த வகுப்பறையில் எல்.சி.டி., முறையில் விரிவுரையாளர் பாடம் நடத்துவார். அதே பாடம் , வேளாண் பல்கலையின் www.tnau.ac.in என்ற இணையத்தளத்திலும் இருக்கும்.
மாணவர்கள், லேப் டாப்பை பார்த்துக் கொண்டும், எல்.சி.டி., முறையில் மானிட்டரில் தெரியும் பாடத்தையும் படித்துக் கொள்ளமுடியும். இந்த வகுப்பறையில் எடுக்கப்படும் வீடியோ, ‘இ - லேப்’பில் ‘எடிட்’ செய்யப்பட்டு, ‘டீன்’ ஒப்புதலுக்குப்பின், வேளாண் பல்கலையின் இணையத்தளத்தில் ‘அப்லோடு’ செய்யப்படுகிறது.
வகுப்பறையில் விரிவுரையாளர் நடத்திய பாடத்தை கவனிக்க முடியாத மாணவர்கள், அந்த வகுப்பில் பங்கேற்க முடியாத மாணவர்கள், தங்களது கையில் உள்ள லேப்டாப்பில் பல்கலையின் இணையத்தளத்தில் வீடியோ, ஆடியோ சகிதம் பாடத்தை பார்க்க முடியும். வகுப்பு ‘மிஸ்’ ஆகிவிட்டதே என்ற வருத்தம் மாணவர்களுக்கு ஒரு போதும் ஏற்படாது.
