பி.எட்., கல்லூரியில் அதிக கட்டணம்; 1,703 ‘சீட்’ திரும்ப ஒப்படைப்பு
பி.எட்., கல்லூரியில் அதிக கட்டணம்; 1,703 ‘சீட்’ திரும்ப ஒப்படைப்பு
UPDATED : செப் 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தமிழகத்தில் ஏழு அரசு பி.எட்., கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2,095 இடங்கள் உள்ளன. 116 தனியார் பி.எட்., கல்லூரிகளில் 4,650 இடங்கள், அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. இப்படிப்பிற்கு, 27 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், கடந்த 5ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடந்தது. இதில் 3,964 பேர் கலந்துகொண்டனர். 3,064 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர்.
கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 1,000 ரூபாயும், இதர பிரிவினர் 2,000 ரூபாயும் செலுத்த வேண்டும். கவுன்சிலிங்கில் கலந்துகொண்டவர்களில் 1,703 பேர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் திரும்ப ஒப்படைத்து, கட்டணத் தொகையைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
தனியார் பி.எட்., கல்லூரிகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயிக்கவில்லை. கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட மாணவர்கள், அரசு கவுன்சிலிங்கில் சேரும் மாணவர்களிடம் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என எதிர்பார்த்தனர்.
ஆனால், தனியார் பி.எட்., கல்லூரிகள், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் வசூலிக்கும் தொகையையே, அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடமும் வசூலித்துள்ளன.
அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடமும், தனியார் பி.எட்., கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்ததால் தான், மாணவர்கள், இடங்களைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர். கவுன்சிலிங்கின் முடிவில், காலியாக உள்ள இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இம்மாத கடைசியில் நடக்கவுள்ளது.
