மாநில குழு விளையாட்டுப் போட்டிகளில் சென்னை மாணவர்கள் ஆதிக்கம்
மாநில குழு விளையாட்டுப் போட்டிகளில் சென்னை மாணவர்கள் ஆதிக்கம்
UPDATED : ஜன 25, 2012 12:00 AM
ADDED : ஜன 25, 2012 12:14 PM
திருநெல்வேலி: நெல்லையில் நடக்கும் பள்ளி மாணவர்களுக்கான மாநில குழு விளையாட்டுப் போட்டிகளில் சென்னை மாணவர்கள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.
நெல்லையில் மாநில அளவிலான 54வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் துவங்கின. ஹாக்கி, கால்பந்து, வாலிபால், பால் பாட்மிட்டன், டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து, த்ரோபால், கோகோ உட்பட 12 போட்டிகள் நெல்லையில் 15 இடங்களில் நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5,200 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 150 நடுவர்கள், 350 உடற்கல்வி ஆசிரியர்கள், 450 அணி மேலாளர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகிறது. இரண்டாம் நாளில் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்தன. பெரும்பாலான போட்டிகளில் சென்னை மாணவர்கள் வெற்றி பெற்றனர். பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நாமக்கல் டிரினிட்டி அகாடமி பள்ளி மாணவி சுமாப்பிரியங்கா முதலிடம், மதுரை மேரிஆன் மெட்ரிக் பள்ளி ஷாபிகா இரண்டாம் இடம், சென்னை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி பிரிதிகா ராணி மூன்றாம் இடம் பெற்றனர். டென்னிஸ் இரட்டையர் பெண்கள் போட்டியில் சென்னை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி பிரிதிகாராணி, ஜனனி முதலிடம், வேலம்மாள் பள்ளி வினோதினி, ஷாரா இரண்டாம் இடம், ஈரோடு ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி சாருமதி, நிகிலா மூன்றாம் இடம் பெற்றனர்.
டேபிள் டென்னிஸ் இரட்டையர் ஆண்கள் போட்டியில் சென்னை சாந்தோம் பள்ளி ராகுல், திலீபன் முதலிடம், ஈரோடு கொங்கு கல்வி நிலையம் துஷ்யந்த், ஜவகர் இரண்டாம் இடம், அரக்கோணம் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி சேதுராமன், ரோகேஷ்குமார் மூன்றாம் இடம் பெற்றனர். டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் சென்னை வைஸ்யா வித்யாலயா சபரீஷ் முதலிடம், திருச்சி கன்டோன்மென்ட் சாம்பியன் பள்ளி லியோ அல்ட்ரின்ராஜ் இரண்டாம் இடம், நெய்வேலி டவுன்ஷிப் ஜவகர் மெட்ரிக் பள்ளி அலோசியஸ் மூன்றாம் இடம் பெற்றனர்.
ஷட்டில் பாட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் சிவகாசி ஒய்.ஆர்.டி.வி., மெட்ரிக் பள்ளி ராஜவிஷ்ணு முதலிடம், கோயம்புத்தூர் கிகானி மெட்ரிக் பள்ளி நவீன் இரண்டாம் இடம், சேலம் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி கவுதம் மூன்றாம் இடம் பெற்றனர். ஷட்டில் பாட்மிட்டன் ஆண்கள் இரட்டையர் போட்டியில் கோயம்புத்தூர் கிகானி மெட்ரிக் பள்ளி நவீன், திலக்குமார் முதலிடம், ஈரோடு எஸ்.வி.என். மெட்ரிக் பள்ளி ராஜேஷ், ரவிகாந்த் இரண்டாம் இடம், சேலம் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி தனுஷ்குமார், கவுதம் மூன்றாம் இடம் பெற்றனர். போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
